புண்ணியப் புரட்டாசியில் பெருமாள் தரிசனம்! தர்ப்பணமும் தானமும் தலைமுறை காக்கும்!

 

-MMH

      புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம் ஆகும். அதிலும் 2021 புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. ஏகாதசி, திருவோணம் எனவோர் அபூர்வ சேர்க்கை கொண்ட சிறந்த நாளான இன்று பெருமாளை வழிபடுவதுடன் நம்முடைய முன்னோர்களுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு. ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியும்,  காரியத்தடைகள் நீங்கி வெற்றியும் கிடைக்கப் பெறலாம்.

புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை சனிக்கிழமைகளில் வணங்குவது விசேடமாகும்..

புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது. இக்கன்னி மாதம். கன்னி மூலையில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும். பவுர்ணமி தினத்தில் அம்மனுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம். புனிதப் புரட்டாசியில் அனைவரும் பெருமாள் பேரருள் பெற நல்வாழ்த்தை உரித்தாக்குவது,

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments