சிங்கம்புணரி அருகே வறுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஈரோடு தாய்மை அறக்கட்டளை!

 

-MMH

           சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வெள்ளிக்குன்றம்பட்டியில் வறுமையின் கொடுமையால் வாழ வழியில்லாமல், தன்னை நம்பியிருந்த குடும்பத்தினரை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு, ஈரோடு தாய்மை அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

வெள்ளிக்குன்றம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி போதும்பொண்ணு (26). சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் இறந்துவிட, தனது இரண்டு குழந்தைகள், மூளை வளர்ச்சி இல்லாத ஒரு மைத்துனர் மற்றும் வயதான மாமனார், சின்ன மாமனார் ஆகியோருடன் ஒரே குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

அத்துடன், கூலி வேலைக்குச் சென்று அனைவருக்கும் கால் வயிறு, அரை வயிறு கஞ்சி ஊற்றிக் காப்பாற்றி வந்த நிலையில், சில ஆண்டுகளாக போதும்பொண்ணுவுக்கு கர்ப்பப்பையில் பிரச்னை இருந்துள்ளது. இதற்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால், கடந்த 31ஆம் தேதி அப்பகுதி மலையில் உள்ள விஷச் செடிகளை பறித்து தின்று தற்கொலை முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி போதும் பொண்ணு இறந்துவிட்டார். போதும் பொண்ணு இறந்த நிலையில், அவரை நம்பியிருந்த இரண்டு குழந்தைகள், இரண்டு முதியோர், மூளை வளர்ச்சி இல்லாத மைத்துனர் என 5 பேரின் நிலைமை கேள்விக்குறியானது.

இதுகுறித்த செய்தி நாளைய வரலாறு இதழிலும் (https://www.nalaiyavaralaru.page/2021/09/blog-post_95.html?m=1) வேறு சில ஊடகங்களிலும் வெளியானது. இதைக்கண்ட, ஈரோடு தாய்மை அறக்கட்டளையினர் வெள்ளிக்குன்றம்பட்டி கிராமத்திற்குச் சென்று, போதும்பொண்ணுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அத்துடன், போதும்பொண்ணுவின் இரண்டு குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவுகளை தாய்மை அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்தனர்.

மேலும், மூளை வளர்ச்சி இல்லாத சிறுவனையும், இரண்டு முதியோரையும் காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக, போதும்பொண்ணுவின் குடும்பத்தினருக்கு மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினர். இதுதவிர, அவர்களின் மருத்துவச் செலவினங்களுக்காக ₹.7,000 வழங்கினர்.

தாய்மை உள்ளத்துடன் உதவிக்கரம் நீட்டியுள்ள ஈரோடு தாய்மை அறக்கட்டளையினரின் இந்தச்செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, அறக்கட்டளையினருக்கு வெள்ளிக்குன்றம்பட்டி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments