பொள்ளாச்சி - போத்தனூர் இரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது..!!

 

-MMH

      பொள்ளாச்சி - போத்தனூர் இடையே ரயில்வே பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று, 75 கி.மீ. வேகத்தில் மின்சார ரயில் இன்ஜினை இயக்கி சோதனையோட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி - போத்தனூர், பாலக்காடு - திண்டுக்கல் இடையே அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகளுக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுக் கடந்த 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன.

பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் விரைந்து பணிகளை முடித்து மின்சார ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி - போத்தனூர் இடையே 40 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இருப்புப் பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று  முதல்கட்ட சோதனை ஓட்டம் மின்சார ரயில் இன்ஜின் மூலம் நடத்தப்பட்டது.


 மதியம் 12.20 மணிக்குப் போத்தனூரில் இருந்து புறப்பட்ட ரயில் என்ஜின், 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு, மதியம் 1.03 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயிலை ஓட்டுநர் ஜெயகாந்தன் இயக்கினார். ரயில்வே, துணை முதன்மைப் பொறியாளர் ஷாஜு, உதவி பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட ரயில்வே பொறியாளர்கள் இருப்புப் பாதையில் மேல் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மீண்டும் மதியம் 1.13 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து ரயில் இன்ஜின் போத்தனூரை நோக்கிச் சென்றது. 

சோதனை ஓட்டத்தில், பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை, விரைவில் என்ஜினில் பெட்டிகளை இணைத்து அடுத்த கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.

Comments