சிங்கம்புணரியில் பணியின் போது மின்சாரம் தாக்கி, மின்கம்பத்தில் சிக்கிய ஊழியர்!! போராடி மீட்ட தீயணைப்புத்துறை!!

     -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவர் மின்வாரியத்தில் கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சிங்கம்புணரி பிளாசம் மண்டபம் அருகே சொர்ணபுரி நகர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் பழுது நீக்கும் பணிக்காக மின்மாற்றியை அணைத்துவிட்டு செந்தில்குமார் ஒரு மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தெரு விளக்குகளுக்கான மின்தடத்தில் திடீரென மின்சாரம் வந்ததால் மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் தொங்கத் தொடங்கினார்.  

உடனடியாக பொதுமக்கள் தகவல் அளித்ததையடுத்து விரைந்து வந்த மின்வாரிய பணியாளர்கள் தெருவிளக்குகளுக்கான மின் தடத்தை அணைத்துவிட்டு, தங்கள் சக ஊழியரை மீட்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படத் தொடங்கிய அதே வேளையில், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த தீயணைப்புத்துறை ஊழியர்களும் மின்கம்பத்தில் ஏறி மின்சாரம் தாக்கி மயக்கநிலையில் இருந்த செந்தில்குமாரை பத்திரமாக இறக்கி அவரைக் காப்பாற்றினர். 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு செந்தில்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். தங்கள் சக ஊழியரை மீட்கும்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் தங்கம், ராம்குமார், மனோகரன், ராஜசேகர், ராஜசேகர் மற்றும் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் அனைவரையும் பொது மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments