முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மீண்டும் சிக்கல்..!!

  -MMH

   முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி சென்றுள்ளனர்.

கோவை, சென்னை மாநகராட்சிகளில் பெரியளவில் மோசடி, முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை மற்றும் சென்னையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் நிறுவனங்கள், இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக எஸ்.பி வேலுமணியின் சகோதரர் எஸ்.பி அன்பரசன் இல்லம், அவர் நடத்தும் நகைக்கடை, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரன் இல்லம், பண்ணை வீடுகள் மற்றும் கேசிபி இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் முன்னாள் மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகியின் தந்தை இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.

அப்போது குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரது வீட்டில் இருந்து ஓரே ஒரு வங்கியின் லாக்கர் சாவியை கைபற்றினர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் குனியமுத்தூரில் உள்ள வங்கியின் லாக்கரை திறந்து சோதனையிட்டனர்.

மேலும் வங்கியின் லாக்கர் கடைசியாக எப்போது திறக்கப்பட்டது என்பது குறித்தும் வங்கி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி சென்றுள்ளனர். வங்கி லாக்கரில் இருந்து ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், அனஸ்.

Comments