மீனாட்சிபுரம் முத்துசாமிபுதூர் தரை பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி!!

  -MMH

  பொள்ளாச்சி ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் நேற்று முன்தினம் ஏழு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள  தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்ல அதிக வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நமது நாளைய வரலாறு ஆன்லைன் செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதியிலிருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் முத்துசாமிபுதூர் அருகே உள்ள தரை பாலத்திற்கு மேல் நேற்று தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இதனால் இவ் வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சில மணி நேரங்களில் தண்ணீர் குறைந்து வாகனப் போக்குவரத்துக்கு தரைப்பாலம் தயாரான பொழுது தண்ணீரில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் தரைப்பாலத்தில் ஆங்காங்கே மலைபோல் குவிந்தன. இதனால் தண்ணீர் குறைந்தும் தரை பாலத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப் பாலத்தை சுத்தம் செய்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டுமென இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments