எட்டி பார்த்தால் தாமிரபரணி ஆறு.. ஆனா குடிக்க தண்ணீர் இல்லை! கொதித்து எழுந்த நெல்லை மக்கள் போராட்டம்!!

   -MMH

   நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் முத்தமிழ் நகர் மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் குடிதண்ணீர் வழங்கப்படாத நிலை இருந்துள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தங்களுக்கு கூட முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையே என்று மக்கள் ஆத்திரமடைந்தனர். எனவே இன்று காலை மேலப்பாளையத்திலிருந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பிரதான சாலையில், பொது மக்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, முத்தமிழ் நகர் பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த மாரியம்மன் கோவில் தெரு பகுதி மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால், உணவுகளை சமைப்பதற்கும் குடி தண்ணீருக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, முறையான குடிநீர் விநியோகம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு மாற்று பாதைகள் வழியாக வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்சாரி நெல்லை.


Comments