மதுரை மேலூரில் சமூக நீதி நாள் கொண்டாட்டம்!

 -MMH

    பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி, சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரின் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.


மேலூரில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மேலூர் பேருந்துநிலைய நுழைவாயிலில் பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட திவிகவின் சார்பில் பிரம்மாண்டமான மேடை அமைத்து பெரியாரின் படம் வைக்கப்பட்டது. இப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை திவிகவின் மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.


திவிகவின் மேலூர் பகுதி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த இந்திகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் கண்ணன், மணவாளன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் அய்யாவு, துரை, கார்மேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலாளர் மெய்யர், மே 17, தமிழ் புலிகள் ஆகிய இயக்கங்களின் நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்குகொண்டு தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

மேலும், இப்பகுதியின் சனநாயக முற்போக்கு இயக்கங்களின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

- மதுரை வெண்புலி.

Comments