கோவையில் கொரோனா தடுப்பூசி முகாம் ; ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு!!

  -MMH

   கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. இதன்காரணமாக வருகிற 12-ஆம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர்  அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது இதற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் தலைமை தாங்கினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது

கோவை மாவட்டத்தில், அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், உள்பட அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்து தரப்பினரும் எளிதாக தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் உள்பட 15 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ளபடி வருகிற 12-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை கோவை மாவட்டம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள்,தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ள பகுதிகள், மலைப்பகுதிகள், போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 1500 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த முகாம்களில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் .இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக   ஆட்சியர் அவர்கள்  கூறினார்.ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments