பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தி தயாராகும் சிலைகள்..!!

 

-MMH

       கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஹிந்து அமைப்புகள் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதும்; குடியிருப்புகளில் பலரும் விநாயகர் சிலை வைத்தும் வழிபாடு செய்வதும் வழக்கம். கடந்தாண்டு ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் விற்பனை சரிந்தது. இந்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சிலைகள் விற்பனை எப்படி இருக்குமென தெரியவில்லை.

இந்நிலையில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெறும் என்ற நம்பிக்கையில், மண்பாண்ட தொழிலாளர்கள், சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி ஆர். பொன்னாபுரம், ஆவல்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள், கோதவாடி குளத்து மண்ணில், அழகிய விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டனர். அரை அடி முதல், இரண்டு அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது.

கோதவாடி மண் எடுத்து, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்தாண்டு கிடைத்த மண்ணை கொண்டு சிலை தயாரிக்கிறோம். கொரோனா ஊரடங்கு காரணமாக, 70 சதவீதம் மட்டும் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.ஒரு சிலை, 150 ரூபாய் முதல், இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். ஊரடங்கு காரணமாக, பெரிய விநாயகர் சிலைகள் தயாரிக்கவில்லை.

விநாயகர் சதுர்த்தி விழா, வீடுகளில் நடைபெறும் என்ற எண்ணத்தில் சிலைகள் தயாரித்துள்ளோம். கார்த்திகை தீபத்துக்கு விளக்குகள் தயாரிக்க, கோதவாடி குளத்தில் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments