ஓடும் காரிலிருந்து பெண்ணின் சடலம் வீசப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக காரின் ஓட்டுநர் கைது!!

    -MMH

    கோவை மாவட்டத்தில் சின்னியம்பாளையத்தில் ஓடும் காரிலிருந்து பெண்ணின் சடலம் வீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அவருக்கு 50 வயது இருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 6ஆம் தேதி அதிகாலை மீட்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தின் மீது அடுத்தடுத்து சில வாகனங்கள் ஏறி இறங்கியதால் அந்த சடலம் உரு தெரியாமல் காணப்பட்டது.

விசாரணையில் போலீஸ்:

இந்த நிலையில் அந்த பெண் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வந்தார்கள். இதற்காக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அந்த சடலம் காரில் இருந்து வீசப்பட்டது போல் தெரிந்தது. இதனால் பெண்ணை யாரேனும் காரிலிருந்து தள்ளி விட்டனரா இல்லை ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை காரிலிருந்து வீசினரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தார்கள்.


சடலத்தின் மீது வாகனங்கள்:

அந்த சிசிடிவி காட்சிகளில் பார்க்கும் போது அந்த சடலத்தின் மீது பல வாகனங்கள் ஏறி இறங்கியது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கார் யாருடையது, அந்த பெண் யார் என விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு அருகே கணியூர் சுங்கச் சாவடியில் காரின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.

நாட்கள் கழித்து திடீர் திருப்பம்:

இந்த நிலையில் 5 நாட்கள் கழித்து திடீர் திருப்பமாக இந்த பெண் சடலம் காரிலிருந்து வீசப்படவில்லை. இது விபத்து என தெரியவந்தது. கடந்த 6 ஆம் தேதி அதிகாலை அந்த பெண் சாலையை கடக்க முயன்ற போது ஒரு கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறி விழுந்த அந்த பெண்ணின் மீது பல வாகனங்கள் மோதியது என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் காளப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ஃபைசலை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் திருச்சியில் இருந்து சென்ற போது இந்த விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இந்த நிலையில் அந்த விபத்தில் இறந்தவர் கோவையில் ஆதரவற்ற பெண் என்பது தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஏற்கெனவே அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கழுத்தில் எந்த வித சந்தேகம் ஏற்படுத்தும் காயங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஃபைசல் காரை ஏற்றியதால் அந்த பெண் இறந்தாரா, இல்லை ஃபைசல் ஏற்றிவிட்டு சென்ற போது அவ்வழியாக வந்த வாகனங்கள் ஏற்றியதால் அவர் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் அந்த பெண் மீது காரை மோதியதும் ஃபைசல் நினைத்திருந்தால் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கலாம் என்பதே மக்களின் கருத்தாகும். மேலும் போலீஸாரே கண்டுபிடிக்கும் வரை விபத்து குறித்து ஃபைசல் மூச்சுவிடாதது ஏன் என்றும் துருவி துருவி கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும் இதில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா இல்லை ஃபைசல் சொல்வது போல் விபத்தா என்றும் அறியப்பட்டு வருகிறது. டிரைவரின் லைசன்ஸ், வண்டியின் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

-Ln இந்திராதேவி முருகேசன் / சோலை ஜெயக்குமார்.

Comments