பொள்ளாச்சிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  -MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், ஆழியார் கவியருவி (குரங்குஅருவி), டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக சுற்றுலாத்தலங்கள் திறக்க அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டது.

இருப்பினும், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கவியருவி, டாப்சிலிப், வால்பாறை செல்ல தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதியளிக்கப்பட்டது. இதில் ஆழியார் அருகே உள்ள கவியருவி செல்லவும் அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று கவியருவியில் சுற்றுலா பயணிகள் ஏரளமானோர் குவிந்தனர். அருவியில் பயணிகள் குடும்பத்தாரோடு குளித்து மகிழ்ந்தனர்.

இதேபோல, டாப்சிலிப் பகுதியில் உள்ள அரசு தங்கும் விடுதிகளுக்கும் ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி யானை சவாரி மற்றும் மலையேற்றம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டதால், குடும்பத்தாரோடு வந்து இயற்க்கை அழகை ரசிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments