தெர்மாகோலில் அழகிய சிற்பங்களை செதுக்கி, அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த இளைஞர் அரவிந்த்!!

  -MMH

   தெர்மாகோலில் அழகிய சிற்பங்களை செதுக்கி, அசத்தி வருகிறார் கோவையை சேர்ந்த இளைஞர் அரவிந்த். கோவை தொப்பம்பட்டி பிரிவு வடமதுரை பகுதியில் வசித்து வரும் இவர், தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஓவியம் வரைவதில் இருக்கும் அதே ஆர்வம், சிலைகள் செதுக்குவதிலும் இவருக்கு உண்டு. சிறிய பென்சில் முனையில் கூட, நுட்பமாக ஒரு உருவத்தை இவரால் செதுக்கி விட முடியும். சோப்புக்கட்டி, மெழுகு, ரப்பர் துண்டு ஆகியவற்றில் அழகிய சிற்பங்களை உருவாக்கி இருக்கிறார். இப்போது தெர்மாகோல் அட்டைகளில், அழகிய சிலைகளை செதுக்கி அசத்தி வருகிறார். அம்மன் சிலை, சித்தர்கள் உருவம், விவேகானந்தர், அப்துல்கலாம் என, பல உருவங்களை தெர்மாக்கோலில் சிலையாக வடித்திருக்கிறார். அரவிந்திடம் பேசிய போது, ''ஓவியக்கலையை நான் முறையாக படிக்கவில்லை.

சிற்பம் செதுக்கும் கலையையும் நானே கற்றுக்கொண்டேன். மிக சிறிய கண்ணுக்கு தெரியாத அளவுள்ள சிற்பங்களை செய்து இருக்கிறேன். பெரிய சிற்பங்கள் செய்ய ஆசை ஏற்பட்டது. அதனால், கெட்டியான தெர்மாக்கோல் சீட்களை வாங்கி ஒன்றாக இணைத்து உருவங்களை செதுக்கினேன். இன்னும் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களை சிலையாக செதுக்கி, விரைவில் கண்காட்சியாக வைக்க இருக்கிறேன்,'' என்றார். அரவிந்த்!

-சுரேந்தர்.

Comments