மாணவர்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு போராட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர்

   -MMH

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு போராட வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதியுள்ளார். இருந்தபோதிலும், தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மற்றொரு மாணவியும் உயிரிழந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் மாணவர்களுக்கு தேர்வு குறித்து மன அழுத்தத்தை கொடுக்க கூடாது என்றும் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரியலூர் மாணவி உயிரிழப்பு குறித்து அறிந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாணவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவரது தந்தை கருணாநிதிக்கும் ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஒன்றிய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் தொடரும். கடந்த ஆண்டுகளில் நீண்ட போராட்டத்திற்கு பிறகுதான் தமிழ் நாட்டிற்கு விலக்கு அறிவிக்கப்பட்டது. எனவே விலக்கு கிடைக்கும் வரை நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். எனவே இது போன்ற சூழ்நிலையில் மாணவர் மனதை திடப்படுத்திக்கொண்டு போராட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

-வேல்முருகன் சென்னை.

Comments