மதகுபட்டி அருகே கோர விபத்தில் பெண் மருத்துவர் சம்பவ இடத்திலே பலி!

 

-MMH

         சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியைச் சேர்ந்தவர் ஆதப்பன் மனைவி இந்திரா (வயது 60). மதகுபட்டியை பூர்விகமாக கொண்டு மதுரையில் வசித்துவரும் மருத்துவர். இவர் குழந்தைகள் நல மருத்துவராக இருந்து தற்சமயம் ஓய்வுபெற்றுள்ளார்.



இன்று காலை சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊர் வழியாக காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். சிவகங்கை அருகே ஒக்கூர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது, மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்றது. எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவர் இந்திரா சென்ற கார் மீது மோதி அப்படியே கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய மருத்துவர் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் காரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.

தகவல் கிடைத்து காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி, லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்திருந்த காரை தீயணைப்புதுறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் மருத்துவர் இந்திராவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதகுபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே லாரி ஓட்டுநர் அஜீத், மதகுபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

-அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments