ரயிலின் கடைசி பெட்டியில் `X' என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏன்?

  -MMH

  தினமும் ரயிலில் பயணிப்போர் நம்மில் ஏராளம் பேர் இருப்போம்.

ஒவ்வொரு முறை ரயில் நம்மைக் கடந்து சென்ற பின்பும் அதன் கடைசிப் பெட்டியில் 'X' என்ற குறியீடு இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருப்போம். அது ஏன் என்று பலமுறை யோசித்தும் இருப்போம். அது எதற்கு தெரியுமா?

அந்தக்  குறியீடுக்கான அர்த்தம் என்னவென்பதை இந்தச் செய்தியில் பார்ப்போம். 

ரயிலின் கடைசிப் பெட்டியில் மட்டும்தான் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் 'X' என்ற குறியீடு இடப்பட்டிருக்கும். அது ரயிலின் கடைசிப் பெட்டி என்பதைக் குறிப்பதற்காக அந்தக் குறியீடு இடப்பட்டிருக்கிறது. 'X' என்ற அந்தக் குறியீட்டின் கீழே சிவப்பு நிற விளக்கு ஒன்று இருப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த விளக்கும் அது கடைசிப் பெட்டி என்பதைக் குறிப்பதற்காகவே பொருத்தப்பட்டிருக்கிறது. பகலில் 'X' என்ற குறியீட்டை வைத்தும், இரவில் சிவப்பு நிற விளக்கு ஒளிர்வதை வைத்தும் அது கடைசிப் பெட்டி என நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய ரயில்களில் குறைந்தபட்சம் 18 பெட்டிகளில் இருந்து அதிகபட்சம் 24 பெட்டிகள் வரை இணைக்கப்பட்டிருக்கும். பயணத்தின்போது பெட்டிகளின் இணைப்பில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு ரயில் பெட்டிகள் சில, இணைப்பிலிருந்து விலகிவிட்டன என்றால், அதைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்காது. இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளவே கடைசி பெட்டியைக் குறிக்கும் வகையிலான 'X' என்ற குறியீடும், சிவப்பு நிற விளக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு வேளை கடைசிப் பெட்டியில் இந்தக் குறியீடுகள் இல்லை என்றால், அடுத்து வரும் ரயில் நிலையத்திலேயே இதனை எளிதாகக் கண்டறிந்து தனித்து விடப்பட்ட ரயில் பெட்டிகளை மீட்பதற்கும், வேறு ரயில்கள் அந்தக் குறிப்பிட்ட பாதையில் பயணித்து விபத்து ஏற்படாமல் தடுக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த 'X' என்ற குறியீட்டுடன் சில ரயில்களில் LV என்ற ஒரு அட்டையையும் கடைசியில் தொங்கவிட்டிருப்பார்கள். 'Last Vehicle - LV', கடைசிப் பெட்டி என்பதைக் குறிப்பதற்காகவே அதுவும் பயன்படுத்தப்படுகிறது.

- ராயல் ஹமீது.

Comments