சிங்கம்புணரி எம்.எம்.போர்ஜிங் தொழிற்சாலையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தொழிற்சங்கம் துவக்கம்!!

    -MMH

MMF எனப்படும் 'மெட்ராஸ் மோட்டார் போர்ஜிங்' எனும்
நிறுவனம் சென்னை, சிங்கம்புனரி மற்றும் விராலிமலையிலும் தொழிற்சாலைகள் நடத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலை கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 

அதில் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என சுமார் 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த எட்டு வருடங்களாக இந்த நிறுவனத்தில் எந்த ஒரு தொழிற்சங்கமும் இல்லை. இந்நிலையில் ஊதிய விகிதாச்சாரத்தை புதிதாக மாற்றியமைக்க வேண்டும், வருடாந்திர ஊதிய போனஸ் விகிதத்தை அதிகப்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் புதிதாக தொழிற்சங்கம் ஒன்றை அமைத்துள்ளனர்.

"தமிழ்நாடு இஞ்சினியரிங் தொழிலாளர் சங்கம்" என்ற இந்தச் தொழிற்சங்கத்தின் கொடியை, சிங்கம்புணரியில் உள்ள மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலில் தமிழ்நாடு பொது தொழிலாளர் காங்கிரஸ் சங்க ஒருங்கிணைப்பாளர் ரெங்கசாமி நேற்று ஏற்றி, சங்கத்தை துவக்கி வைத்தார். இந்த சங்கத்தின் தலைவர் சுரேஷ் பேசும்பொழுது, 'தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய போனஸ் மற்றும் ஊதிய விகிதாச்சாரத்தை உயர்த்தித் தரவேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொழிற்சங்கம் அமைந்துள்ளது. நிறுவனம் நல்ல முறையில் இயங்கிட நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்' என கூறினார்.


இந்நிகழ்வில் அமமுக தலைமை நிலைய செயலாளர் கே.கே.உமாதேவன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம அருணகிரி மற்றும் புதிய தொழிற்சங்கத்தின் தலைவர் சுரேஷ், செயலாளர் ஆனந்த், பொருளாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர்  கலந்துகொண்டனர். சுமார் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் துவக்கத்தில் அப்பகுதியில் சிறிதுநேரம் பதட்டம் ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. 

- அப்துல்சலாம்.

Comments