கோவையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க 150 இடங்களில் "மக்கள் சபை" எனும் நிகழ்ச்சி!

 -MMH

பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, மனுக்கள் பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மக்கள் சபை என்னும் நிகழ்ச்சி தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதன்படி கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தலா ஒரு இடம் என 100 இடங்களிலும், 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 50 இடங்கள் என மொத்தம் 150 இடங்களில் மக்கள் சபை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்குகிறார். 

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மக்கள் சபை நிகழ்ச்சி சனிக்கிழமை முதல் 21-ந் தேதி வரை கோவை மாவட்டத்தில் 150 இடங்களில் அரசு பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நேரில் மனுக்கள் கொடுக்கலாம்.

இதன்படி பொதுமக்கள் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை, பொதுக்கழிப்பிடம், தெருவிளக்குகள், சுகாதாரம் மற்றும் திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக வழங்கப்படும் உதவித் தொகைகள் குறித்து மனு கொடுக்கலாம்.

இதேபோல் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, ஸ்மார்ட் கார்டு, மகளிர் சுயஉதவிக்குழு கடன் உதவி, கல்வி கடன், சுயதொழில் புரிய வங்கி கடன் உதவி, தனியார் துறை மூலமாக வேலை வாய்ப்பு வழங்குதல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்குதல், இலவச தையல் எந்திரம் மற்றும் இதர வசதிகள் தொடர்பான குறைகள் குறித்தும் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments