நெல்லை மாவட்டத்தில் 2020ம் ஆண்டில் 2338 பேருக்கு புற்றுநோய்!! புற்றுநோய் மைய நிறுவனர் சங்கர்மகாதேவன் தகவல்!!

     -MMH

நெல்லை  மாவட்டத்தில் 2020ம் ஆண்டு மட்டும் 2338 பேருக்கு  புற்றுநோய் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என நெல்லை புற்றுநோய் மைய நிறுவனர் சங்கர்மகாதேவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மொத்தம் 50 ஆயிரத்து 173 புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளதாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் அறிக்கை கூறுகிறது. 

இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2338 பேர்  புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிக அளவில் வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்களின் 38 சதவீதம் பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று விடுகின்றனர் தமிழ்நாட்டில் புற்று நோய் கட்டுப்பாடு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது அங்கு பணியாற்றிய மருத்துவர் சாந்தா அவர்களின் லட்சியத்தை நனவாக்கும் வகையில் கிராமப்புறங்களில் நெல்லையில் புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதுவரை இந்த மையத்தின் மூலம் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 800 பேருக்கு விழிப்புணர்வும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் முன் பரிசோதனையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை உதவி மற்றும் வழிகாட்டுதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை 2- ந்தேதி  மற்றும் மூன்றாம் தேதிகளில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் படுவதாக அவர் தெரிவித்தார்

-அன்சாரி, நெல்லை.

Comments