அரைகுறையாக நிற்கும் பாலத்துக்கான நிலம் கையகப்படுத்தி, தமிழக அரசு ரூ.29.37 கோடி ஒதுக்கி, ஐகோர்ட்டில் சமர்ப்பித்தது!!

 -MMH

எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில், 10 ஆண்டுகளாக அரைகுறையாக நிற்கும் பாலத்துக்கான நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு ரூ.29.37 கோடி ஒதுக்கி, ஐகோர்ட்டில் சமர்ப்பித்த, அரசாணை வெளியாகியுள்ளது.கோவை, திருச்சி ரோட்டிலிருந்து சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்.,காலனிக்குச் செல்லும் வழியில் 'ரயில்வே கேட்' அமைந்துள்ள இடத்தில், மேம்பாலம் கட்டுவதற்கு, 2010ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. 2011ல், ஆட்சி மாற்றத்துக்குப்பின், பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தாமல் பாலம் கட்டும் பணி துவங்கியது.2013ல், நிலம் கையகப்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு 15(2) நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உரிய இழப்பீடு நிர்ணயிக்காமல் பாலம் கட்டும் பணியைத் தொடரக்கூடாது என, நில உரிமையாளர்கள் கோர்ட்டில் தடையுத்தரவு பெற்றனர். ஏழாண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.வழக்கை விரைவாக முடிக்கவும், இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2016 தேர்தலில், இத்தொகுதியில் தி.மு.க., வென்றது. அதனால், இப்பணியைத் தொடர அப்போதைய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இப்போது தி.மு.க., ஆட்சி வந்து விட்டது. ஆனால், அ.தி.மு.க., தொகுதியாக சிங்காநல்லுார் மாறியுள்ளது. இதனால், இப்போதும் இப்பணி நடக்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்தது.அச்சந்தேகத்தை போக்கும் வகையில், புதிய அரசு பொறுப்பேற்றதும், எஸ்.ஐ. எச்.எஸ்., பாலம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், 'செப்., 26க்குள் இழப்பீடு தராவிட்டால், முக்கிய அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகவேண்டும்' என, உத்தரவிட்டது.இதன் காரணமாக, இழப்பீடுக்கு, 29 கோடியே, 37 லட்சத்து, 87 ஆயிரத்து, 910 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், அரசாணை (எண்:82) பிறப்பிக்கப்பட்டுள்ளது. நில மதிப்புக்கு சதுரடிக்கு, 2,600 ரூபாய் வீதமும், 100 சதவீதம் இழப்பீடும் (soltium), 12 சதவீத வட்டித்தொகையும் சேர்த்துக் கணக்கிட்டுத் தரப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்த காலகட்டத்தைத் தவிர்த்து, 2021 செப்., 30 (நேற்று) வரையிலான 46 மாதங்களுக்கு வட்டி கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்து, கட்டடங்கள், மரங்கள் போன்றவற்றுக்கும் தனித்தனியாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. கடந்த, 2013ம் ஆண்டின் புதிய நில ஆர்ஜிதச் சட்டத்தின்படி இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐகோர்ட்டில் சமர்ப்பித்த அரசாணை வெளிப்படையாக வெளியிடப் பட்டதால், நில உரிமையாளர்களும், அப்பகுதி மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இருப்பினும், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகள், கடைகள், திருமண மண்டபம் போன்ற வணிகக் கட்டடங்கள் என அனைத்துக்கும் சேர்த்து, சரியான அளவில் இந்த இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் நில உரிமையாளர்களுக்கு எழுந்துள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிலம், கட்டடம் என தனித்தனியாகக் கணக்கிட்டே இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் பிரச்னை எழ வாய்ப்பில்லை. ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. கிடைத்ததும் இழப்பீடு தரப்பட்டு, நிலம் எடுக்கப்பட்டு பணிகள் துவங்கும்' என்றனர்.பத்தாண்டு காலமாக இழுபறியாகி வந்த பாலம் கட்டும் பணி, புத்தாண்டுக்குள் துவங்கினால் நல்லது.

-சுரேந்தர்.

Comments