சிங்கம்புணரி அருகே பலத்த காற்றில் மரம் வேரோடு சாய்ந்தது! இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயம்!!

   -MMH

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டாரபகுதியில் நேற்று மாலை 4மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அந்த நேரத்தில் திருப்பத்தூர் வட்டம், வடுகபட்டியை சேர்ந்த ஜோதிடர்  பாக்கியராஜ் தனது மனைவி மற்றும் மகன் விமல் (வயது 10) ஆகியோருடன் திண்டுக்கல் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சிங்கம்புணரியை அடுத்த மருதிப்பட்டியருகே அவர்கள் வந்தபோது சாலையோர புளியமரம் ஒன்று உயர்மின்கம்பியை அறுத்துக் கொண்டு, சாலையின் குறுக்கே அவர்கள் மீது விழுந்தது.

இதில் சிறுவன் விமலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த ஒருவர் விமலை மீட்டு தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்று சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சேர்த்தார். முதலுதவிக்கு பின் விமல் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

சம்பவ நேரத்தில் அந்த இடத்தைக் கடந்த வட சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினருக்கும், மின்வாரியத்திற்கும் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கும் தகவல் தெரிவித்ததுடன் மீட்புப் பணியை முடுக்கிவிட்டார்.

மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மருதிப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வெண்ணிலா வெங்கடேஷ்வரன்  சம்பவ இடத்திற்கு, அவருடைய ஜேசிபி இயத்திரத்தை மரத்தை அகற்றுவதற்காக கொண்டு வந்தார். மரம் விழும்போது உயர்மின் கம்பியும் மரத்தின் கீழ் சிக்கியதால் அகற்றுவதில் தாமதம்  ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை அப்புறப்படுத்தியபின் சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய சிறப்பு அலுவலர் சீ.பிரகாஷ் தலைமையிலான வீரர்கள், மரங்களை வெட்டி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் விரைந்து அப்புறப்படுத்தினர்.

இதன் காரணமாக  காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மீட்புப் பணியை துவக்கியதிலிருந்து போக்குவரத்தை சரி செய்வதற்காக இறுதிவரை சம்பவ இடத்தில் நின்று பணி செய்த வடசிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், அங்கிருந்த அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பெற்றார். சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

- ராயல் ஹமீது, அப்துல்சலாம்.

Comments