புலிகளின் வாழ்விடங்களை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு பேரணி !

 

-MMH

         புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தேசிய புலிகள் ஆணையம் சார்பில் புலிகளுக்கான இந்திய வாகன பேரணி கடந்த 26-ந்தேதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம், பெரியார் புலிகள் காப்பகம் வழியாக நேற்று முன்தினம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு வந்தது. பின்னர் அன்றைய தினம் மாலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு வாகனம் வந்தது. அங்கு புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு புலிகள்  காப்பகங்கள் இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் முன்னிலை வகித்தார். தேசிய புலிகள் ஆணையத்தின் தென்மண்டல ஐ.ஜி. முரளி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புலிகள் ஒரு கவர்ச்சிக்கரமான இனம் அல்லது கீஸ்டோன் இனம் என்று அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதில் பல உயிரினங்களின் வாழ்விடங்களை புலிகள் பாதுகாக்கின்றன. உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ள புலியின் வாழ்விடம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். இந்தியாவில் ஒட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2,967 என மதிப்பிடப்பட்டது. 2022-ம் ஆண்டின் இலக்கு வைக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே 2018-லேயே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பு ஆக்கியது.

உலகில் உள்ள புலிகளில் இன்று 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் இந்தியாவில் உள்ளன. வேட்டையாடுதல், சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்கள் காரணமாக புலிகளுக்கு நிச்சயமற்ற எதிர்காலம் உள்ளது. புலிகள் வாழ வேண்டும் என்றால் உடனடியான அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் 75 -வது சுதந்திர தினத்தை கொண்டாடுதலையொட்டி புலிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேரணி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நிறைவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கள இயக்குனரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் வரவேற்று பேசினார். இதையொட்டி இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாணவிகள் நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மரக்கன்று நடுதல், பலூன் பறக்க விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட பேரணியை தென்மண்டல ஐ.ஜி. முரளி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் கணேசன் (பொள்ளாச்சி), தேஜஸ்வி (திருப்பூர்), உதவி வன பாதுகாவலர்கள் கணேஷ்ராம், கிருஷ்ணசாமி, செல்வம், வனச்சரகர்கள் காசிலிங்கம், நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments