கோவையில் கொட்டி தீர்த்த கன மழை!! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! வாகன ஓட்டிகள் தவிப்பு!!!

 -MMH

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பிற்பகல் 12 மணிக்கு மேல் வானம் கருமேகம் சூழ்ந்து திரண்டு வந்தது. அப்போது கருமேகம் சூழ்ந்து இருந்ததால் பகலில் கூட இரவு போல் காட்சி அளித்தது. 

இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழை காரணமாக உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், திருச்சி சாலை, சரவணம்பட்டி, கணபதி மாநகர், காந்திமா நகர், பீளமேடு, கீரணத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

கோவை-அவினாசி ரோடு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சுரங்கப்பாதைக்குள் குளம் போல் தேங்கி அங்கு செல்லும் தண்டவாளத்தை தொட்டபடி மழைநீர் நின்றது. இதனால் அந்த வழியாக செல்ல வந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வேறு வழியாக செல்ல அறிவுறுத்தினர்.

மேலும் மழை காரணமாக கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் இந்த சுரங்கப் பாதை அருகே உள்ள கடலைக்கார சந்து சாலையில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து வெள்ளம்போல் ஓடியது.  

மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை மாலை 4.30 மணிக்கு மேல் சற்று தணிந்தது. 

மழைக்கு ஒதுங்கிய வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் சென்றதால் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். 

மேலும் புறநகர் பகுதிகளான பச்சாபாளையம், காளம்பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, துடியலூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. அப்பநாயக்கன்பாளையம் கலைஞர் நகரில் 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்தனர்.

கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், ஹவுசிங் யூனிட், டிவிஎஸ் நகர், கணுவாய் தடாகம், சோமயம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, குருடம்பாளையம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ததால்சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

 ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. 

இதனால் சித்திரைச்சாவடி, பேரூர் புட்டுவிக்கி உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதுதவிர குளங்கள் மற்றும் குட்டைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இதேபோல் கணபதி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. 

அத்துடன் பல இடங்களில் மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக கோவைப்புதூரில் 5 மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments