தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ; வாகனங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய அறிவுரை!

 

-MMH

   கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளி போனது. இதற்கிடையில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள தி வேல் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ள அவசர கால வழி, முதலுதவி பெட்டி, தீ தடுப்பு கருவி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் டிரைவர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயந்தி, கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:-

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகா பகுதிகளில் 63 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்கு 462 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த ஆய்வுக்கு 320 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. வாகனங்களை ஆய்வு செய்ததில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் உள்ளதால் 50 சதவீத வாகனங்களில் குறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கேமராக்கள், ஜி.பி.ஆர்.எஸ். வசதி இல்லாதது, அவசர கால வழி, படிக்கட்டுக்கள் பழுது, இருக்கைகளின் கவர் கிழிந்து இருத்தல், காலாவதியான முதலுதவி பெட்டி, தீ தடுப்பான் கருவி இல்லாதது போன்ற குறைகள் இருந்தன.

இவற்றை ஒரு வார காலத்திற்குள் சரிசெய்து மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும். அதன்பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் வாகனங்களின் வேகம், எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்தும் கொள்ளும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வாகனங்களில் அமைக்க வேண்டும். வாகனங்களை மெதுவாக இயக்கி மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். வாகனங்களில் பாதுகாவலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments