குளம் என நினைத்து தோண்டப்பட்ட இடத்தில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்! !

 

  -MMH

   பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட டி.கோட்டாம்பட்டி மகாலட்சுமி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் வடிகால், கால்வாய் தூர்வாரும் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. 

அப்போது அந்த பகுதியில் குளம் என்று நினைத்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரினர். மேலும் 15 அடிக்கு ஆழப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் அந்த இடத்தை குளம் என்று உறுதிப்படுத்த முடியாமல், அதிகாரிகள் குழப்பம் அடைந்ததால், அந்த பணியை அப்படியே விட்டு விட்டனர். 

இதற்கிடையில் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீர் அங்கு தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

"டி.கோட்டாம்பட்டி மகாலட்சுமி நகரில் இருப்பது குளம், மைதானம், சாலை என்று மாற்றி, மாற்றி கூறப்பட்டு வருகிறது. ஆனால் வருவாய்துறை மூலம் சர்வே செய்யாமல், குளம் என்று நினைத்து அதிகாரிகள் அந்த இடத்தில் தோண்டினர். ஆனால் அதன்பிறகும் குளம் என்று உறுதிப்படுத்த முடியாததால், குழப்பத்தில் அந்த பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது.

இதனால் அதிகாரிகள் தோண்டிய பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி மூலம் வருவாய் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் வருவாய் துறை அளவீடு பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதற்கிடையில் கழிவுநீர் சென்ற பாதையை தனியார் தோட்டத்துக்காரர் அடைத்து விட்டார். இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அண்ணா நகர், சுப்பையன் நகர், கவுரி நகர் பகுதிகளில் உள்ள கழிவுநீர் மகாலட்சுமி நகரில் வந்து தேங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது, கழிவுநீர் குழாய் வழியாக திரும்பி வீட்டிற்குள் வந்து விட்டது. தற்போது கழிவுநீர் குளம் போன்று தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. 

கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், கழிவுநீரால் வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த இடத்தை சர்வே செய்து குளமா? மைதானமா, சாலையா? என்ற குழப்பத்தை தீர்க்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments