பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு!! பொதுமக்களின் கோரிக்கையை ஏற்பார்களா அரசுத்துறை அதிகாரிகள்!!

    -MMH

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு கிணத்துக்கடவு வழியாக 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் பஸ், கார், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி ரெயில்வே கேட் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சாலையில், ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு ரோட்டை கடக்க 2½ கி.மீ. தூரத்துக்கு  வாகனங்கள் யு டர்ன்  எடுத்து திரும்பு வதற்காக இடைவெளி விடப்பட்டு உள்ளது.  

அதன்படி கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் சேரன் நகர், மேட்டுப்பாளையம் பிரிவு, சென்றாம்பாளையம் பிரிவு கல்லாங்காடு புதூர் பிரிவு ஆகிய பகுதியில் சாலையில் இடைவெளி உள்ளது. இந்தப்பகுதியில் இடைவெளி இருக்கிறது என்பதை குறிப்பதற் காக சிக்னல் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த சிக்னல் செயல்படுவது இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் யு டர்ன் எடுத்து திரும்ப முயற்சிக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.  

இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க இடைவெளி இருக்கும் இடத்தில் மின் விளக்கு வசதி இருப்பது இல்லை. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: "கிணத்துக்கடவு பகுதியில் 4 இடங்களில் சாலையை கடக்க இடைவெளி உள்ளது. அங்கு மின்விளக்கு வசதி இல்லை. இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் சாலையில்  யு டர்ன்  எடுக்கும்  வாகனங்கள் தெரிவது இல்லை. எனவே அங்கு உடனடியாக மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும்.
அதுபோன்று முள்ளுபாடி ரெயில்வே மேம்பாலத்திலும் மின்விளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக அங்கும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments