குழந்தைகள் கற்றல் திறன் வளர்ப்பு புத்தகங்கள்...!! - காமாட்சி ஸ்ரீனிவாசன்! சாதனை மங்கைகள் - தன்னம்பிக்கை தொடர் 1
"உங்கள் குழந்தைகள் அறிவுத்திறன், கற்றல் திறனை வளர்க்க புத்தகங்கள் நிச்சயம் உதவும்" என அடித்து கூறுகிறார் ப்ரித்தி பதிப்பக ஆசிரியர், வெளியீட்டாளர் காமாட்சி ஸ்ரீனிவாசன்...!!
இதற்கென பிரத்யேகமாக படித்து புத்தகங்களை குழந்தைகளுக்காக வடிவமைத்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ள காமாட்சி ஸ்ரீனிவாசன் பாரதி கண்ட புதுமைப்பெண்..!!
ப்ரித்தி பப்ளிகேசன்ஸ் தோற்றம், நோக்கம், இதுவரை சாதித்தது, சந்தித்த வி.ஐ.பி.,கள் குறித்து மனம் திறந்து பேசுகிறார், சாதனை மங்கை காமாட்சி ஸ்ரீனிவாசன்...!!
இவர், பெயருக்கு பின்னால் மட்டும் அல்ல, சாதனைகளுக்கு பின்புலமாகவும் கணவர் ஸ்ரீனிவாசன் இருக்கிறார் என்பதே நிஜம்...!
இனி, சாதனை மங்கை காமாட்சி ஸ்ரீனிவாசன் சிறப்பு பேட்டி:1. உங்கள் பெயர், சொந்த ஊர், உங்கள் நிறுவனம் பெயர்?
என் பெயர் காமாட்சி ஸ்ரீனிவாசன். நான் சென்னையில் வசிக்கிறேன். நான் பிரித்தி பப்ளிகேஷன்ஸ் என்னும் பதிப்பகத்தை துவங்கி குழந்தைகளுக்கான பாட புத்தகங்களை வடிவமைத்து ப்ரீத்தி பப்ளிகேஷன்ஸ் என்னும் பெயரில் வெளியிட்டுள்ளேன்.
2. உங்கள் குடும்பத்தை பற்றி கூறுங்கள்..?
என் பெற்றோருக்கு நான் மூத்த மகள். எனக்கு ஒரு இளைய சகோதரர் உள்ளார். எனது கணவர் திரு. சீனிவாசன். அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு பிரித்திகா , ரோஷினி என இரு மகள்கள்.
3. உங்கள் படிப்பு – ஆர்வம்?சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் கவர்ன்மென்ட் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன்.சென்னை நுங்கம்பாக்கத்தில் கேர் இன்ஸ்டிட்யூட்டில் பி.ஜி.டி.எல்.டி ஓராண்டு பயிற்சி பெற்றேன். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன்.
4.உங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் யார் ? ஏன் பிடிக்கும்?
சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் தமிழாசிரியை அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்கள் தமிழ் கற்பித்த விதம் எனக்கு தமிழின் மீது அதிக பற்றினை உண்டாக்கியது. அவரை அன்போடு "தமிழ் அம்மா" என்று அழைப்போம்.
கல்லூரியில் புனிதா என்னும் ஆசிரியை மிகவும் பிடிக்கும். தமிழ் வழி கல்வியில் கற்றதால் கல்லூரியில் ஆங்கிலத்தில் கற்க மிகவும் சிரமப்பட்டேன்.
அவரது தன்னம்பிக்கையான வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தி தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறச் செய்தன. இறுதியில் பஸ் கிளாஷ் வித் டிஸ்டிங்ஷன் இல் தேர்ச்சி பெற்றேன். இதற்கு அவர் அளித்த தன்னம்பிக்கை வார்த்தைகளும் ஊக்கமும் முக்கிய காரணம். இதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
5.பிடித்த உலக, தேசிய தலைவர்கள் - சமூக சேவகர்கள் - ஏன்?எனக்கு அப்துல் கலாம் அவர்களை மிகவும் பிடிக்கும். தனக்கென எதுவும் சேர்த்துக் கொள்ளாத உன்னதமான மனிதர். தன் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அவரது பங்களிப்பு ஏராளம். தனக்கென எதையும் யோசிக்காது தன்னலமின்றி பொதுநலத்த்துடனே உண்மையாக உழைத்த மாமனிதர்.
ஒரு நேர்காணலில் அவரிடம் கேட்ட கேள்வி இது.
உங்களது கண்டுபிடிப்புகளில் மிகவும் நீங்கள் பெரிதாக நினைப்பது எது ? என கேட்டனர்.
அவரது பதில் : போலியோ மற்றும் ஊனமுற்ற நடக்க இயலாத குழந்தைகளுக்கு மிக குறைந்த எடையில் காலணி மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை செய்து கொடுத்தபோது அதை அணிந்து கொண்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை விட எனக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை என பதில் கூறியிருந்தார். இது அவரது தாய்மை உள்ளத்தை நமக்கு பறைசாற்றுகிறது.
ஏவுகணை நாயகன் என போற்றப்படும் அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் பல வெற்றிகளை தாய்நாட்டிற்கு பெற்று தந்துள்ளார். இவரைப் போல் இன்னொரு மனிதரை நாம் காண முடியுமா என்பது மிகவும் அரிது.
ஒரு மனிதனின் பிறப்பு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். கலாம் அய்யா வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதே மிகுந்த மகிழ்ச்சி. குழந்தைகளின் மீது அவர் கொண்ட பற்று இன்று மட்டுமல்ல என்றும் பல இளைஞர்கள் மனதில் அவர் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
6.உங்கள் நிறுவனம் தொடங்கிய ஆண்டு?இந்த ஆண்டில்தான் துவங்கினோம். 2021 - பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை புத்தக கண்காட்சியில் முதன்முதலாக எங்களது புத்தகங்களை வெளியிட்டோம்.
இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பெயர்கள்:
மொத்த எண்ணிக்கை 15 ;
புத்தகங்கள்
பிளாஷ் கார்ட்ஸ், ஆக்டிவிட்டி புக்ஸ், ரியூசபில் புக்ஸ் அண்ட்
போர்ட்ஸ், தமிழ் ஆங்கிலம் கணிதம் இந்தி ஆகியவற்றில் வெளியிட்டோம்
(Flash cards, Activity Books, Reusable Books and boards in Tamil English Maths & Hindi)
7.விலை ரூபாய் எத்தனை முதல் எத்தனை வரை?
ரூபாய் 25 முதல் 250 வரை
8.புத்தகத்தை வெளியிடுவதற்கான நோக்கம் ?சிறப்பு ஆசிரியர் பயிற்சி பெறும்போது மாணவர்களிடையே சிலருக்கு ஆரம்பநிலை கற்றலில் சிறந்த பயிற்சி இல்லாததை கண்டறிந்தோம். இதனை சரி செய்ய தமிழ், ஆங்கிலம் கணிதம் ஆகியவற்றில் நல்ல அடித்தளம் பெற சில புத்தகங்களை வெளியிட வேண்டும் என்னும் சிந்தனை வந்தது.
சிறப்பு ஆசிரியராக என்னால் ஐந்து முதல் பத்து குழந்தைகளுக்கு மட்டுமே நான் கற்பிக்க இயலும்.
ஆனால் எங்களது மீண்டும் மீண்டும் பலமுறை எழுதி பழகக்கூடிய ரியூசபல் புத்தகங்கள் மற்றும் ஃபிளாஷ்ஸ்கார்ட் ஆக்டிவிட்டி புத்தகங்கள் வாயிலாக நான் இன்று தமிழகத்தில் பல குழந்தைகளிடையே சென்றடைந்து உள்ளேன். எனது நோக்கம் மிகவும் எளிதாக நிறைவேறி உள்ளது. எங்களிடம் புத்தகங்களை வாங்கிய பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் இருந்து கிடைத்த பின்னூட்டங்கள் எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.
9.எந்த மாதிரி பிரச்சினை, குறைபாடுகள் உள்ள குழந்தைகள் வாங்கி படிக்கலாம் ?
தமிழ், ஆங்கிலம் கணிதம் ஆகியவற்றில் எழுத படிக்க சிரமப்படும் குழந்தைகளுக்கு மிகவும் பயன் அளிக்கும் புத்தகங்கள் உள்ளன.
எங்களிடம் தமிழ் புத்தகத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு. மற்ற புத்தகங்களை காட்டிலும் தமிழ் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகி இரண்டாம் பதிப்பிற்கு சென்றுள்ளன. தமிழில் பிழையின்றி கற்க குழந்தைகளுக்கு எளிதாக கற்கும் வகையில் அடுத்த நிலைக்கான புத்தகங்களை வெளியிட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை விரைவில் வெளிவரும்.
எங்கள் புத்தகங்கள் அனைத்தும் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மட்டுமன்றி சாதாரண குழந்தைகளுக்கும் பயன்படும் விதத்தில் நான் வெளியிட்டுள்ளேன். சிறப்பு குழந்தைகளுக்கு என முத்திரையிட்டு வெளியிட்டால் அவை குழந்தைகளிடம் சென்றடைவது கடினமாகிவிடும்.
எங்கள் குழந்தைகளுக்கு எந்த குறையும் இல்லை. இவை எனக்கு தேவையில்லை என பெற்றோர்கள் ஒதுக்கிட வாய்ப்பு உண்டு. ஆகவே சாதாரண குழந்தைகளும் கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளும் எளிதில் தங்கள் கல்வியை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் சில குழந்தைகளுக்கு ஒரு முறை இருமுறை பயிற்சி செய்தல் போதுமானதாக இல்லை. ஆகவே இந்த பலமுறை பயிற்சி செய்யக் கூடிய புத்தகங்கள் அவர்களுக்கு கற்பதில் மகிழ்ச்சியும் தெளிவையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
10. பதிப்பகத்தை துவங்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்ற காரணம் ?எனது இளைய மகளுக்கு கற்றலில் சில குறைபாடுகள் உள்ளதால் நான் சிறப்பு ஆசிரியர் பயிற்சிக்கு சென்று படித்தேன். பின்னர் தான் கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் கல்வியில் நல்ல அடித்தளம் பெற சிறந்த புத்தகங்களை வெளியிட விரும்பினேன்.
ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இன்று போதுமான நேரம் கிடைப்பதில்லை. குறைந்த நேரத்தில் அவர்கள் பலமுறை பயிற்சி செய்வது இருவருக்கும் சிரமமான காரியமாக உள்ளது.
ஆகவே இந்த புத்தகங்கள் என் குழந்தைக்கு மட்டுமல்ல இன்னும் பல குழந்தைகளுக்கும் தாயாருக்கும் கற்றலில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
11. பதிப்பக துறையில் எதிர்கால திட்டம்…?
தமிழில் என்ன புத்தகம் தேவைப்பட்டாலும் அவற்றை எங்களிடம் கேட்கும் படி தமிழில் நிறைய புத்தகங்களை வெளியிட எனக்கு மிகவும் ஆசை. இன்னும் 5 ஆண்டுகளில் நிறைய தலைப்புகளில் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்பதே என் ஆவல். அதற்கான முயற்சியை நான் விடாது செய்து கொண்டிருப்பேன். இப்போது வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் நானே பாடம் மற்றும் கணினி வடிவமைப்பு ஆகியவற்றை செய்து வெளியிட்டுள்ளேன். அதனால் என்னால் நிறைய புத்தகங்களை உடனடியாக வெளியிட முடிவதில்லை.
சில பள்ளிகளுக்கும் எங்களது புத்தகங்களை வழங்கினேன். இன்னும் பல பள்ளிகளுக்கு எங்கள் புத்தகங்கள் சென்றடைய இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி.
12.குழந்தைகளுக்கான புத்தகம் மட்டுமே வெளியிட உத்தேசமா ?ஆம். நிச்சயமாக. தற்சமயம் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் வெளியிட உள்ளோம். பின்னர் இதற்கு அடுத்த நிலைகளுக்கான பதக்கங்களை வெளியிட உள்ளோம்.
13. உங்கள் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதா?
நிச்சயமாக…. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளது. வண்ணமயமான புத்தகங்கள் அவர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
14. பதிப்பகத்தை துவங்கி அதன் வாயிலாக தங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்ன..?
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமாக தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகிய மூன்று புத்தகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 2 ஆயிரம் புத்தகங்கள் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குழந்தைகளுக்காக அச்சிட்டு கொடுத்தோம்.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்தது. துவங்கிய சில மாதங்களிலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.
15. தங்களுக்கு பிடித்த வாசகம் என்ன ?
நீ பார்த்து வியந்தவரையும் உன்னை பார்த்து வியக்க செய்- இந்த வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
16. பதிப்பகத்தின் வாயிலாக தங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் என்ன?தொடர்ச்சியாக 280 மணி நேரம் தமிழகத்தின் 555 பெண் தொழில் முனைவோர்கள் ஜூம் மீட்டிங்கில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். இதற்கு ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழும் பதக்கமும் நிகழ்விற்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நானும் கலந்து கொண்டது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
17. தங்கள் புத்தகங்கள் குறித்து விஐபிக்கள் கூறிய கருத்து மற்றும் தங்களது அனுபவம்...?இவ்வாண்டு சென்னை புத்தக கண்காட்சியில் அரசியல் பிரமுகர் மற்றும் சர்க்கார் பட வில்லன் திரு பழ கருப்பையா அவர்கள் புத்தகத்தைப் பற்றி பாராட்டினார்.
திரைப்பட இயக்குனர் திரு தங்கர்பச்சான் அவர்களும் எங்களது புத்தகங்களை பார்த்து முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். எழுத்தாளர் மற்றும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவரகளும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.விஜய் டிவி புகழ் ஜோடி நம்பர் 1 டைட்டில் வின்னர் திரு அமுதவாணன் அவர்களும் எங்கள் புத்தகங்களை வாங்கினார், பாராட்டுகள் தெரிவித்தார். மேலும் சில விஐபிகளுக்கு புத்தகங்கள் அனுப்பியுள்ளோம். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எங்கள் புத்தகங்களை நேரிலும் தபால் முறையிலும் அனுப்பியுள்ளோம்.
18. தாங்கள் தற்போது மாணவர்களுக்கு கூற நினைப்பது..?கல்வி ஒன்றே மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்கும். சில குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் சில சிரமங்கள் ஏற்படுவதால் அவர்களின் கல்வி தடைபடுகிறது. ஆரம்பத்திலேயே சரியான பயிற்சி அளிப்பதன் மூலம் இதனை தவிர்த்து விடலாம்.
ஆரம்ப காலத்தில் முறையான கல்வி கற்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் இதனை பெற்றோர்களும் உணர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் வாழ்க்கை வளமாக அமையும். குழந்தைகளின் கற்றலில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.புத்தகம் வாங்குவோர் தொடர்புக்கு:
Prithi Publications,
No.5 K.R. Ramasamy Street,
MGR Nagar,
Chennai - 78.
www.prithipublications.com
மொபைல் நம்பர்:
94440 01988 .
சாதனை மங்கை காமாட்சி சீனிவாசன் பதிப்பகத்துறையில் இன்னும் பல மைல்கல்களை தொட வாழ்த்துகளை தெரிவித்து நாம் விடைபெற்றோம்.வாழ்த்துகள் தோழி காமாட்சி சீனிவாசன்...!!
நேர்காணல்: கோவை ஆர்.கே.பூபதி.
Comments