சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் 100 ஆண்டுகள் பழமையான கோவில் குடமுழுக்கு விழா!

    -MMH 

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அருள்பாலிக்கும் 100 ஆண்டுகள் பழமையான அழகுகருப்பசாமி, சின்ன கருப்பர் சாமி ஆலய குடமுழுக்கு விழா பக்தர்கள் முன்னிலையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக நவம்பர் 13 சனிக்கிழமை மாலை துவங்கிய யாகசாலை வேள்வியில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திக்பந்தனம், பிரவேசபலி ரக்ஷாபந்தனம் மற்றும் பூர்ணாகுதியுடன் தீப ஆராதனை நிறைவு பெற்று முதல் நாள் யாக வேள்விகள் முடிந்தன.

அதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை துவங்கிய யாகசாலை பூஜையில் பிம்பசுத்தி, கோ பூஜை, லட்சுமி பூஜை,  நாடி சந்தானம், ஸ்பர்ஸாகுதி மற்றும் பூர்ணாகுதி நிறைவுபெற்று நான்காம்கால யாக பூஜைகள் நிறைவு பெற்றன.

அதை தொடர்ந்து தீப ஆரத்தியுடன் தீர்த்த கலசங்கள் கோவிலை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்தது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு வேத விற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அப்பகுதி யாதவ சமுதாய பெருமக்கள் மற்றும் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments