இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து 2 பேர் உயிரிழப்பு! காவல்துறையினர் விசாரணை !!

    -MMH 

   கோவை மாவட்டம் காரமடை அருகே சின்னதொட்டி பாளையம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அவர் பெட்ரோல் போடுவதற்காக காரமடை லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 

இதில் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேரம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த வாசு (21), அவரின் பின்னால் உட்கார்ந்து இருந்த பாரதி (21) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வாசு பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் பிணத்தை கைப்பற்றி மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments