கோவை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு 3 யானைகள் பரிதாபமாக இறந்தன!!

    -MMH 

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அடிக்கடி இடம் பெயர்ந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவை- பாலக்காடு ரெயில் தண்டவாளம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியை காட்டு யானைகள் கடக்கும் போது விபத்து ஏற்படுவதை தடுக்க ரெயிலை மெதுவாக இயக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. ஆனாலும் ரெயிலில் அடிபட்டு யானைகள் இறப்பது தொடர்கதையாக இருக்கிறது.அந்த வகையில் மீண்டும் ஒரு பரிதாபமாக சம்பவம் நேற்று அரங்கேறியது. அதன் விவரம் வருமாறு: 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரெயில் (எண்-12602 மங்களூருவில் இருந்து புறப்பட்டு கேரளா பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி, பெரம்பூர் வழியாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில்நிலையத்தை சென்றடையும்).

கோவையை அடுத்த போத்தனூரை நோக்கி நேற்று இரவு 9 மணி அளவில் அந்த ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெயில் போத்தனூரை அடுத்த நவக்கரை அருகே தங்கவேல் காட்டு மூலை என்ற இடத்தில் வந்த போது 2 குட்டிகளுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தை கடக்க முயன்றது. யானைகள் திடீரென்று தண்டவாள பகுதிக்கு வந்ததால் டிரைவரால் என்ஜினை நிறுத்த முடிய வில்லை. இதனால் எதிர்பாராதவிதமாக 2 குட்டி மற்றும் பெண் யானை மீது ரெயில் மோதியது. இதில் 2 குட்டிகள் மற்றும் பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயிலில் இருந்த பயணிகள் இறங்கி பார்த்த போது யானைகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்த காட்டு யானைகளை அப்புறப்படுத்தினர். இதற்கிடையே ரயில் நிறுத்தப்பட்டதால் அதில்  இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் அடிபட்டு 2 குட்டிகளுடன் பெண் யானை இறந்தது கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க ரெயில்வே மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments