பொள்ளாச்சி-பாலக்காடு சாலை மேம்பாலம் பணிகள் 90 சதவீதம் நிறைவு..!!

   -MMH

  மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

பொள்ளாச்சி -பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் சாலையின் குறுக்கே பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் பாதை செல்கிறது. இதன் காரணமாக ரெயில் வரும் போது ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேம்பாலம் பணிக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பிரிவு மூலம் ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் ரெயில்வே துறை மூலம் தண்டவாள பகுதியில் ரூ.5 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் ரெயில்வே துறை மூலம் பாலத்தின் இருபுறமும் இணைக்கும் வகையில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வே வடிவமைப்பிற்கு அனுமதி கொடுத்த நிலையில் நேற்று பாலத்தின் இருபுறமும் இணைக்கும் வகையில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.

ராட்சத கிரேன் மூலம் இரும்பு தூண்களை தூக்கி, பாலத்தில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையொட்டி வடுகபாளையம் பிரிவில் இருந்து குமரன் நகர், வடுகபாளையம் செல்லும் சாலைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி-வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பால பணிகள் ரூ.50 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்கு 18 தூண்கள் அமைக்க வேண்டும். தற்போது அனைத்து தூண்களும் அமைக்கப்பட்டு விட்டன. 850 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையுடன் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதை தவிர 5 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படுகிறது. வீடுகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எளிதில் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது பாலம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. இந்த நிலையில் ரெயில்வே துறை சார்பில் இரும்பு தூண்கள் அமைத்து பாலத்தின் இருபுறமும் இணைக்கும் பணி நடைபெற்றது.

25 டன் எடை கொண்ட 8 இரும்பு தூண்கள் 110 அடி உயரம் கொண்ட ராட்சத கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டது. பணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments