சங்கனூர் ஓடையை சீரமைக்கும் பணி தொடக்கம் ! மாநகராட்சி அதிகாரி தகவல்!!

   -MMH 

   கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடை, தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ் புரம், புலியகுளம், சிங்காநல்லூர் குளம் அருகே சென்று பின்னர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. ஒரு காலத்தில் இந்த ஓடையில் சுத்தமான தண்ணீர் சென்றது. ஆனால் தற்போது அது ஆக்கிரமிப்பில் சிக்கி கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறிவிட்டது. 

இந்த நிலையில் மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஓடையை தூர்வாரி கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சங்கனூர் ஓடையை சீரமைக்க ரூ.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து ஓடையின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்படுவதுடன், சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதை யடுத்து ஓடையை தூர்வாரும் பணி  தொடங்கியது. 

தற்போது கோவை-மேட்டுப்பாளையம் சாலையை ஒட்டியுள்ள சங்கனூர் ஓடையில் பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

"சங்கனூர் ஓடையை சீரமைத்து, அதன் கரைப்பகுதியில் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப் பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த ஓடையில் 2.3 கி.மீ. தூரத்திற்கு ஓடையை தூர்வாரி, கரையைப்பலப்படுத்தி சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி 2.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் ஓடையின் இருபுறமும் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்படும். 

இதன்மூலம் தண்ணீர் நிலத்திற்கு அடியில் செல்லும். மேலும் சைக்கிள்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றால் ஆட்டோ, கார்கள், மோட்டார் சைக்கிள்கள் இதன் வழியாக பயணிக்க முடியும்."

இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன் .

Comments