காரைக்குடியில் மாணவிகளுக்கு நிகழ்ந்த துயரங்களுக்கு சிபிஐ விசாரணை கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

   -MMH 

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருமளவில் நடந்து வருவதாகவும், அதனால் காரைக்குடிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுவதோடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

ஆனால், உண்மையில் பல்வேறு பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்படுவதாகவும், அதன் தொடர்ச்சியாக அந்தச் சிறுமிகளிடமிருந்து கருமுட்டைகள் எடுக்கப்பட்டு, வியாபார ரீதியாக அதைப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, பச்சிளம் மாணவிகளுக்கு நடந்த துயரங்களை மூடி மறைக்க முயற்சிக்காமல், திரைமறைவில் இருக்கும் மாபியாக்களை கண்டுபிடிக்க, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காரைக்குடி ஆரியபவன் அருகில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

காரைக்குடியில் உள்ள மக்கள் நல இயக்கங்கள் "சமூக நலக் கூட்டியக்கம்" எனும் பெயரில் ஒன்றிணைந்து இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் சமூக நல ஆர்வலர்கள், மாணவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் லெ.மாறன்,பாஜக மாவட்டச் செயலாளர் நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சங்கு உதயகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சிவாஜிகாந்தி, ஏஐடியூசி மாநில செயற்குழு உறுப்பினர் பி.எல்.இராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் சண்முகப்பிரியா, இந்திய மாதர் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் பாண்டிமீனாள், பச்சைத்தமிழகம் தமிழ் கார்த்தி, ஊற்றுகள் ஒருங்கிணைப்பாளர் ஜான்பால், ஆம் ஆத்மி சோமன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். 

தமிழக மக்கள் மன்றம் அமைப்பிற்குக் கிடைத்த பாலியல் புகாரினைத் தொடர்ந்து அவர்களின் முயற்சியினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததால், இச்சம்பவம் குறித்து தமிழக மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமார் விளக்கவுரை ஆற்றினார். தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் செரீப் ஆகியோர் மாணவியர் பலாத்கார பிரச்சனைக்கு சி.பி.ஐ விசாரணை கோரி சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்தபின்பு பேரணியாகச் சென்று, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சருக்கான மனுவினை காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகத்திடம் வழங்கப்பட்டது.

- பாரூக், சிவகங்கை.

Comments