கனமழையால் சிங்கம்புணரியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்! அண்ணா நகரில் வீட்டின் சுவர் இடிந்தது!

 

-MMH

      சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் மருதங்குண்டு குப்பைக் கிடங்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இரவு முழுவதும் குடியிருப்பு வாசிகள் பரிதவித்து வந்துள்ளனர். உடனே பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற பேரூராட்சி பணியாளர்கள் குப்பை கிடங்கு ஓரமாக மழைநீர் செல்ல ஏதுவாக குப்பைகளை அகற்றினர். 

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கால்வாய் தோண்டி, மழை நீரை வடியச் செய்தனர். சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது வழிகாட்டுதல்படி, மேற்பார்வையாளர் தென்னரசு தலைமையிலான பணியாளர்கள் மருதங்குண்டு குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றினர்.

அதேபோல், அரணத்தங்குண்டு கண்மாயில் சிறு மூளை நீர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் இரவு முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும், அண்ணா நகர் பகுதியில் காதர் என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வரும் வீட்டின் பக்கவாட்டுச் சுவர், கனமழையின் காரணமாக நேற்றிரவு இடிந்து விழுந்தது. 

நல்வாய்ப்பாக யாருக்கும் காயமின்றித் தப்பித்தனர். மேலும் சீரணி அரங்கம் அருகே வடக்கு தெருவில் உள்ள பாரதி என்பவரின் மோட்டார் ரீவைண்டிங் கடையில் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது.

-அப்துல்சலாம்.

Comments