வாரச்சந்தையில் மேற்கூரைகளை அப்புறப்படுத்தியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதி!!

   -MMH 

   உடன்குடி வாரச்சந்தையில் மேற்கூரைகளை அப்புறப்படுத்தியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர்..!!

உடன்குடி மெயின் பஜார் 4 ரோடு சந்திப்பில் திங்கட்கிழமைதோறும் செயல்படும் வாரச்சந்தை வளாகம் உள்ளது. ஊருக்கு நடுவே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த வாரச்சந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய வாரச்சந்தை ஆகும். 100-க்கு மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் நிரந்தரமாக கூரைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவீன மாடலில் புதிய கடைகள் கட்டுவதாக சொல்லி அனைத்து கூரை கட்டிடங்களும் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 

புதியதாக கடைகள் கட்டும் பணி ஏதும் தொடங்கப்படவில்லை. இதனால் இங்குள்ள வியாபாரிகள் தற்காலிகமாக பிளாஸ்டிக் பேப்பர்களை மேற்கூரைகளாக கட்டி வியாபாரம் செய்கின்றனர். இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் வெயில் மற்றும் மழையில் அவதிப்படுகின்றனர்.

இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது:-

"உடன்குடி வாரச்சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த சந்தையில் இருந்த மேற்கூரையை அகற்றி விட்டனர். இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் கஷ்டப்படுகிறோம்.

வாரந்தோறும் சந்தைக்கு வந்ததும் பொருட்களை போட்டு வியாபாரத்தை தொடங்கி விடுவோம். தற்போது கடைக்கு வந்ததும் பிளாஸ்டிக் மேற்கூரை அமைத்து விட்டு தான் கடையை போட வேண்டி உள்ளது. இதனால் கடும் அவதிப்படுகிறோம். எனவே உடனே கடை மேற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments