குட்டிகளுடன் உலாவரும் காட்டெருமை கூட்டங்கள்! அதிக கவனத்துடன் வாகனங்களை இயக்க வனத்துறையினர் வேண்டுகோள்! !

 -MMH

   மலைப்பிரதேசமான வால்பாறையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக காட்டு யானைகள், காட்டெருமைகள், சிறுத்தை ஆகியவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள், சாலையில் கூட்டங்கூட்டமாக நிற்கின்றன.  

சில நேரத்தில் குட்டிகளுடன் வெளியே வரும் காட்டெருமைகள் சாலையில் நின்று குட்டிகளுக்கு பாலூட்டி வருகிறது. எனவே இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

"வால்பாறையில் இருந்து சின்கோனா, பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அய்யர்பாடி எஸ்டேட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. 

அதுவும் குட்டிகளுடன் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எக்காரணத்தை கொண்டும் ஒலி எழுப்பி தொந்தரவு செய்யக் கூடாது. 

ஒலி எழுப்பினால் கோபமடைந்து வாகனங்களை தாக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்த சாலைகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வாகனங்களில் செல்பவர்கள் காட்டெருமைகளை தொந்தரவு செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments