எஸ்.பி.வேலுமணிக்கு சவால் விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!!

   -MMH 

    கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாகக் கூறும் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை முடிந்தால் இரண்டு நாட்களில் வெளியிடட்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விட்டுள்ளார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்துகொண்டுள்ளார்.

இதில் கோவை மாவட்டத்திற்குத் தேவையான வளர்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஈஸ்வரன் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், 'கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணியைத் தமிழக முதல்வர் வேகப்படுத்தியுள்ளார். கோவையில் தேவையான வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை இதற்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது. கைது செய்யப்பட வேண்டியவர்கள் கண்டிப்பாகக் கைது செய்யப்படுவார்கள்' என்று அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'கோவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளைத் தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். தமிழ்நாடு முதல்வர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார்' என்று கூறினார்.

கோவையில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 'எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்தெந்த சாலைகளுக்குத் திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகியவற்றின் பட்டியலைத் தெளிவாக வெளியிடட்டும்.

நிர்வாக அனுமதி இல்லாமல், டெண்டர் கூட விடாமல் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், வெறும் தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு பொதுமக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலைப் பணிகள் தொடங்கப்பட்டது. நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும்' என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சவால் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா. கார்த்திக், பையா என்கின்ற கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, சி.ஆர்.ராமசந்திரன், டாக்டர் வரதராஜன் உடன்இருந்தனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments