நீடாமங்கலம் ஒன்றிய செயலாளரை படுகொலை செய்தவர்கள் கைது!!

-MMH 
   திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன்  கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது     அந்த ஏரியாவில் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் (50). இவர், நேற்று  முன்தினம்  மாலை நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல், அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நடேச.தமிழார்வன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த அவரது ஆதரவாளர்கள், ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொலை சம்பவத்தை கண்டித்து நீடாமங்கலம் கடை வீதியில் உள்ள கடைகள், அவ்வழியாகச் சென்ற வாகனங்களைக் கல்வீசித் தாக்கினர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

மேலும், நீடாமங்கலத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தமிழார்வனின் உடலை போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் திருவாரூர் எஸ்.பி விஜயகுமார் தலைமையேற்று நேரடியாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். நீடாமங்கலத்தில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

உயிரிழந்த நடேச.தமிழார்வன் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு அடிதடி கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த கொலைக்கு முன்விரோதம் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.  

கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:- 

1) பூவனூர் ராஜ்குமார் 

2) மாதவன் 

3) மனோஜ் 

4) சேனா@சேனாபதி

5) எழிலரசன்.

ஆகியோரை திருவாரூர் மாவட்ட தனிப்படையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments