விவசாயிகளின் அல்லும் பகலும் தொடர்ந்த அறவழிப் போராட்டத்தின் அபார வெற்றி!! - எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை!!

   -MMH 

   மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் முடிவு அல்லும் பகலும் தொடர்ந்த அறவழிப் போராட்டத்தின் அபார வெற்றி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.
 
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான் என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் கார்ப்ரெட்களிடம் அடகு வைக்கும் நோக்கில் இயற்றப்பட்ட மூன்று  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடியின் இன்றைய அறிவிப்பு அறவழியில் அல்லும் பகலும் சளைக்காமல் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள அபாரமான வெற்றியாகும்.

இம்மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். டெல்லியில் ஒன்றிய அரசின் பல்வேறு அடக்குமுறைக்கு அஞ்சாமல் விவசாயிகள் அறவழியில் கடும் போராட்டங்களைக் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று முன்னெடுத்தனர். கடும் குளிரிலும், கொடும் வெட்பத்திலும் கொரோனா அச்சுறுத்தலிலும் மனம் தளராமல் தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வந்தனர். இந்திய வரலாற்றில் மட்டும் அல்ல உலக வரலாற்றில்  உரிமைகளுக்காக நடத்தப்பட்ட உன்னத போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் அமைந்தது. மக்கள் உணர்வுகளுக்கு எதிராகவும் நலன்களுக்கு எதிராகவும் சட்டங்களை இயற்றி வரும் பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கிற்கு விவசாயிகள் தங்கள் உன்னத போராட்டத்தின் மூலம் தகுந்த பாடத்தைக் கற்பித்துள்ளனர்.
பிரதமர் மோடி அவர்கள் மூன்று வேளான் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகின்றன என்ற அறிவிப்பை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூன்று வேளான் சட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன என்ற சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மக்களின் உண்மையான போராட்டம் சர்வாதிகாரத்தையும் அடிபணிய வைக்கும் என்பதற்கு மூன்று வேளான் சட்டங்களும் ரத்து என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தைத் திசை திருப்ப ஒன்றிய அரசு எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. விவசாயிகளின் போராட்டத்திற்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது.
இந்த மூன்று வேளான் சட்டங்களை ஆதரித்து அதிமுகவிற்கும் விவசாயிகள் மறைமுகமாகப் பாடம் புகட்டி உள்ளனர் என்றே கருதலாம்.
விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த களம் கண்ட அத்துணை அரசியல் கட்சிகள் இயக்கங்கள் மற்றும் பல்வேறு சட்டமன்றங்களில் கண்டித்து தீர்மானம் இயற்றிய ஜனநாயக சக்திகள் அனைத்திற்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடியின் பிடிவாத போக்கினால் வேளான் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்ட களத்தில் உயிர் நீத்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் கணிசமான  இழப்பீடு ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து விளக்குதல்  மின்சார சட்டம்  அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கல்  முதலிய மக்கள் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ளார்.

-ருசி மைதீன்.

 



Comments