கோவையில் மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக அரசு கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் கைது செய்யப்பட்டார்!

-MMH

        கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேலான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் கல்லூரி மாணவ-மாணவிகள், பி.பி.ஏ.துறைத்தலைவரும், பேராசிரியருமான ரகுநாதன் (வயது42) என்பவர் பாலியல் தொந்தரவு செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:

கல்லூரி பேராசிரியர் ரகுநாதன், 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் தவறான குறுஞ்செய்தி அனுப்புகிறார். இரவு நேரங்களில் மாணவிகளை தொடர்ந்து செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசுகிறார். மாணவிகளின் குடும்ப சூழ்நிலையை அறிந்துகொண்டு அறிவுரை கூறுவதுபோல், ஆசைவார்த்தையில் பேசுகிறார். வகுப்பு நேரம் முடிந்த பின்னரும் பேராசிரியர் தனது அறைக்கு அழைத்து யாரும் இல்லாதநேரத்தில் தகாத நேரத்தில் தகாத வார்த்தைகயில் மாணவிகளிடம் பேசி வருகிறார்.

ஒருமாணவி செய்முறை நோட் எழுதவில்லை என்று கூறி, கோவையில் இருந்து பல்லடம்வரை காரில் அழைத்துச்சென்று மாணவியின் கையை தொடமுயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த மாணவி கையை தட்டிவிட்டு கூச்சல் போட்டு காரில் இருந்து இறங்கிச்சென்றார். மேலும் இதுபோன்ற பல பாலியல் தொந்தரவுகளை பேராசிரியர் செய்துள்ளார். எனவே பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி முதல்வரிடம் புகார் மனு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் கல்லூரி பேராசிரியரால் காரில் வைத்து பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவி ஒருவரும் புகார் செய்து இருந்தார். அதில் "இத்தகைய கேவலமான ஆட்களை சும்மா விட்டுவிடாதீர்கள். ஒரு பெண்ணை தொட்டால் அந்தநாள்தான் அவனுடைய கடைசிநாளாக இருக்க வேண்டும். அவ்வாறு அவன் பயப்பட வேண்டும்.  அந்த அளவுக்கு கடுமையான தண்டனையை பெற்று தாருங்கள் என்று சுயநினைவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றும் அரசு கலைகல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.

கோவையில் மாணவ- மாணவிகளின் போராட்டம் வலுத்ததை தொடர்ந்து, நேற்று ரேஸ்கோர்ஸ் போலீசார் பேராசிரியர் ரகுநாதனை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பின்னர் அவர் மீது 363 (கடத்தல்), 354 (பெண்ணின் உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) 506 (கொலைமிரட்டல்), பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் (4) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

கோவையில் பிளஸ்-2 மாணவி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சம்பவமாக அரசு கல்லூரி பேராசிரியர் கைதான சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-S.ராஜேந்திரன்.

Comments