தாயை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயற்சித்த மகள் கைது!!

   -MMH 

  கோவையில் தனது தாயை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயற்சித்த மகளை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி என்கிற சின்ன ராமாத்தாள் (75). இவரது கணவர் கருப்பசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஜோதிமணி (45 ) என்ற மகள் உள்ளார்.

ஜோதிமணிக்கு சிவகுமார் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாப்பாத்திக்கு சொந்தமான இடம் நீலாம்பூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஜோதிமணிக்கு அவரது கணவர் சிவகுமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஜோதிமணி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜோதிமணி தனது தாயாருக்கு சொந்தமான இடப்பத்திரங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து வைத்துக்கொண்டார். தொடர்ந்து பத்திரங்கள் காணாமல் போனதை அறிந்த பாப்பாத்தி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் சொத்து பத்திரங்களை மகள் ஜோதிமணி எடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பாப்பாத்தி இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கலெக்டர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பாப்பாத்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தாயாரை கொன்று விடலாம் என்ற திட்டம் தீட்டிய ஜோதிமணி தாயார் பாப்பாத்தியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றார்.

அப்போது சுதாரித்துக்கொண்ட பாப்பாத்தி அம்மாள் கட்டிலின் அருகே இருந்த பொருட்களை தட்டிவிட்டு சத்தம் எழுப்பினார். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஜோதிமணியின் குழந்தைகள் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது ஜோதிமணி தனது தாயார் பார்வதியை கொலை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அதனை தடுத்தனர். ஆனாலும் ஆத்திரம் தீராத ஜோதிமணி வீட்டின் வெளியே இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தனது தாயார் பாப்பாத்தி காலில் போட்டார். இதில் இரண்டு கால்களும் உடைந்து ரத்தவெள்ளத்தில் பாப்பாத்தி கிடந்தார்.

இவர்களது சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் பாப்பாத்தியை அங்கிருந்து மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து பாப்பாத்தி கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் .

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்துக்காக பெற்ற தாயை மகளே கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜோதிமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சுரேந்தர்.

Comments