கோவை-பொள்ளாச்சி இடையே மின்சார ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி !

   -MMH 

  அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை காரணம் காட்டி பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப் படாமல் இருந்தது. 

இதற்கிடையில் பொள்ளாச்சி-கோவை ரெயில் பாதை மின் மயமாக்கல் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை கொடுத்தும் ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது.

இதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து கடந்த 1½ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ந் தேதி கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் பொள்ளாச்சிக்கு ரெயில் இயக்கப்பட்டது.

பொள்ளாச்சி-கோவை இடையே காலை 7.25 மணிக்கும் ரெயில் இயக்கப்பட்டது.  பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் டீசல் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்ட நிலையில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு மின்சார என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

"பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு கடந்த 10-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை ஆகிய ரெயில்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ்களாக இயக்கப்படுகிறது. 

இதனால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரூ.30 கட்டண மாக வசூலிக்கப்படுகிறது. இதே பயணிகள் ரெயிலாக இயக்கப் பட்டபோது ரூ.15 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைந்தனர். 

தற்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் மாதந்திர சீசன் டிக்கெட் எடுத்தால் ரூ.270 கட்டணத்தில் செல்லலாம். 

இதுகுறித்து ரெயில்வே பயணிகள் சங்கத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கு பொள்ளாச்சி- கோவை இடையே மீண்டும் பயணிகள் ரெயில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments