இடைத்தேர்தல் முடிவுகள்! சரிகிறதா பாஜக செல்வாக்கு? பாஜகவை எதிர்கொள்ள வலுவாகிறதா காங்கிரஸ்?

-MMH

அக்டோபர் 30-ல் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களின் முடிவுகள், தேசிய அளவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கின்றன. பாஜகவை வீழ்த்தும் வலிமை காங்கிரஸுக்கு இல்லை என பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரும் முடிவே கட்டிவிட்ட நிலையில், ஃபீனிக்ஸ் பறவையாகக் காங்கிரஸ் உயிர்த்தெழுந்திருக்கிறது. ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, பல மாநிலங்களில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான முன்னோட்டமாக, இந்தத் தேர்தல் முடிவுகள் அமையுமா என்று விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், காங்கிரஸின் நகர்வுகள் மீது அதிகக் கவனம் குவிந்திருக்கிறது.

3 மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தல்களில் அசாம், மத்திய பிரதேசம், பிஹார், மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்திருக்கிறது. இமாசல பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் வெற்றிவாகை சூடியிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் பாஜகவைத் துவம்சம் செய்ததில், திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது என்றால், பிற மாநிலங்களில் பாஜகவுக்குக் கடும் சவாலாகக் காங்கிரஸே இருக்கிறது.

அந்தந்த மாநிலப் பிரச்சினைகளே இந்தத் தேர்தலில் பிரதானக் காரணிகளாக இருந்திருக்கின்றன என்றாலும், தேர்தல் முடிவுகள் தேசிய அளவிலான அரசியல் போக்குகளைத்தான் காட்டுகின்றன. இமாசல பிரதேசத்தில் காங்கிரஸுக்குக் கிடைத்திருப்பது மிக முக்கியமான வெற்றி. இமாசல பிரதேசத்தில் முன்னேறிய வகுப்பினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். ஆன்மிகத் தலங்களுக்குப் புகழ்பெற்ற மாநிலம் அது. அம்மாநிலத்திலிருந்து இந்திய ராணுவத்தில் சேருபவர்கள் அதிகம். அதனால்தான், பிரதமர் மோடி அம்மாநிலத்தை, ‘தேவ நிலம்’, ‘வீர நிலம்’ என்றெல்லாம் சொல்லி நெக்குருகுவார். ஆளுங்கட்சியான பாஜக அங்கு தேசியவாத முழக்கத்தையும், தேசப் பாதுகாப்பு முழக்கத்தையும் தொடர்ந்து முன்வைத்துவருகிறது.

எல்லாவற்றையும் கடந்து, அம்மாநிலத்தில் காங்கிரஸ் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மண்டி மக்களவைத் தொகுதியிலும் வென்றிருக்கிறது. மண்டி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிராஜ் தொகுதி, அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்தத் தொகுதி. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய நிதித் துறை இணையமைச்சருமான அனுராக் தாக்கூர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவ்வளவு ஏன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் இமாசல பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான். அவரும் இம்மாநிலத்தில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

இமாசல பிரதேசத்தைப் பொறுத்தவரை, உட்கட்சிப் பிரச்சினைகள், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் பாஜகவுக்கு பங்கம் விளைவித்திருக்கின்றன. அதை முதல்வர் ஜெய்ராம் தாக்கூரே ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியது அங்கெல்லாம் பாஜகவின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. காங்கிரஸில் முதல்வர்கள் மாற்றப்படும்போது ஏற்படும் சலசலப்பு வெளியில் தெரியும். ஆனால், பாஜகவுக்குள் அதுபோன்ற எதிர்ப்புகள் அதிகம் வெளிவராது.

பாஜக ஆதரவு ஊடகங்கள் அதில் ஆர்வமும் செலுத்த மாட்டா. ஆனால், கட்சிக்குள் நிலவும் கசப்பு தேர்தலில் எதிரொலிக்கத்தானே செய்யும். அதுதான் தற்போது இமாசல பிரதேசத்தில் நடந்திருக்கிறது. தேர்தல் பணிகளில் பல பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறியிருக்கிறார்.

காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங்கின் மறைவுக்குப் பின்னர் நடந்த இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் முடிவுகள், இமாசல பிரதேசக் காங்கிரஸுக்குப் புதுத் தெம்பூட்டியிருக்கின்றன. அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பாஜகவின் இந்தத் தோல்வி முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய அளவில் பாஜகவைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்ளும் திறன், காங்கிரஸிடம் வலுவாகவே இருக்கிறது என்றே கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், அதையும் கடந்து அக்கட்சிக்கான ஆதரவுத் தளம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு வளர்ச்சிப் பணிகளில் பெரிய அளவில் திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்பதால், இப்போதும் ராமர் கோயில், முஸ்லிம்கள், கபர்ஸ்தான் போன்றவற்றைத்தான் முக்கிய அம்சங்களாகவும், பிரச்சினைகளாகவும் முன்வைத்துவருகிறார்கள் மோடி, யோகி உள்ளிட்ட பாஜக தலைவர்கள்.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் சார்பில் முதல்வர் முகமாக யாரும் முன்னிறுத்தப்படவில்லை. தேர்தல் வெற்றிக்குப் பின்னர்தான் யோகி, முதல்வராக மோடி - அமித் ஷா ஜோடியால் தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், இப்போது யோகியை முதல்வர் முகமாக முன்னிறுத்தித் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. அதில் அக்கட்சிக்கு நிறையவே சவால்கள் உள்ளன. லக்கிம்பூர் கெரி சம்பவத்தை வைத்து காங்கிரஸ் முன்னெடுத்துவரும் பிரச்சாரம், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும்.

விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தின் தாக்கம் பாஜகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, ஹரியாணா இடைத்தேர்தல் சொல்கிறது. ஹரியாணாவின் எல்லெனாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி) வேட்பாளர் வெற்றிபெற பாரதிய கிஸான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகைத்தின் பிரச்சாரம் முக்கியக் காரணம். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுக்கும், சிவசேனைக்கும் கிடைத்திருக்கும் வெற்றி மகா விகாஸ் அகாடி கூட்டணி வலுவாக இருப்பதையே காட்டுகிறது. இப்படிப் பல அம்சங்கள் பாஜகவின் சரிவு குறித்த சமிக்ஞையை வெளிப்படுத்துகின்றன.

ஜெயராம் தாக்கூர் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். விலைவாசி உயர்வைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்தே காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பதுதான் அது. பல தொகுதிகளில் கிடைத்திருக்கும் தோல்விகள், பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியைக் குறைக்கும் எண்ணத்தை பாஜகவுக்குத் தந்திருப்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. காங்கிரஸ் கட்சி இதை இன்னும் பெரிய அளவில் முன்னெடுத்தால், பல மாநிலங்களில் பாஜகவுக்குக் கடும் சவாலை ஏற்படுத்த முடியும். இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்த நட்டா, பாஜகவுக்குக் கிடைத்த தோல்விகள் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான், பெட்ரோல், டீசல் விலைக் குறைப்புக்கான நடவடிக்கையில் பாஜக அரசு இறங்கினாலும் தேர்தல்களை மனதில் வைத்தே அக்கட்சி இயங்குகிறது என்பதை மக்களும் உணரத் தொடங்கியிருப்பதாக, அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துக் களம் காணுவதில், எதிர்க்கட்சிகள் இதுவரை ஒருமித்த மனநிலைக்கு வரவில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, சரத் பவார் என்று ஆளாளுக்குத் தங்களை முன்னிறுத்திக்கொள்வதில் குறியாக இருக்கிறார்கள்.

பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் வருகை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு (ஆர்ஜேடி) வலு சேர்க்கும் என்று நம்பப்பட்ட நிலையில், ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது, ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றிக்கு வழிவகுத்திருப்பது ஓர் உதாரணம்.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே, பாஜகவுக்கு எதிரான பலம்வாய்ந்த அரசியல் சக்தி உருவாகும். ஒன்றிணைவதுதானே இங்கு பிரச்சினை!

காங்கிரஸ் சற்று நீக்குப்போக்காக நடந்து கொண்டால் எதுவும் சாத்தியமே!

- பாரூக்.

Comments