சிங்கம்புணரியில் கனமழை! கரை புரண்டோடும் பாலாறு! மக்கள் மகிழ்ச்சி!

-MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது பாலாறு ஆகும். இந்தப் பாலாற்றில் கடந்த 16 வருடங்களாக ஆற்று நீரும், மழை நீரும் வந்ததில்லை. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் இரவு முழுவதும் சிங்கம்புணரியில் 14 சென்டி மீட்டர் அளவிற்கு கனமழை பெய்தது.

அதேபோல, நத்தம் பகுதியிலும் கன மழை பெய்து கரந்தமலை பகுதியிலிருந்து வந்த மழை நீர், பாலாற்றின் இருகரை தொட்டு கரைபுரண்டு ஓடிய காட்சி இப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகள் கழித்து இன்றைய இளைய சமுதாயத்தினர் காணாத காட்சியாக பாலாறு கரை புரண்ட காட்சியை காண்பதற்கு இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வேங்கைப்பட்டி, அணைக்கரைப்பட்டி மற்றும் காளாப்பூர் பாலங்களிலிருந்து தண்ணீர் செல்லும் அழகைக் கண்டு மகிழ்கின்றனர்.

இந்தப் பாலாற்றில் நீர்வரத்து இருக்கும் பொழுது சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நிச்சயம் மிக கணிசமாக உயருமாதலால், இன்னும் சில வருடங்களுக்கு இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.  நீரின்றி வறண்ட கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் நீரோட்டம் கிடைக்கப்பெற்று நீர் ஊறத் தொடங்கியதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர்.

மேலும், பல வருடங்களாக பராமரிப்பின்றி காணப்படும் இந்த பாலாற்று படுகையில் கருவேல மரங்கள், சீமை கருவை மரங்கள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதிக அளவு தண்ணீர் வரும் காலத்தில் ஊருக்குள் ஆற்று நீர் புகும் அபாயம் உள்ளதாக ஓசாரிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, சிவபுரிப்பட்டி, விழுப்புனிக்களம், காளாப்புர் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். காடு போல் வளர்ந்து, தண்ணீர் செல்லும் பாதையில் தடைபோல மறைத்துள்ள சீமை கருவேல மரங்களை போர்கால அடிப்படையில் அகற்ற இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாரூக், ராயல் ஹமீது.

Comments