இத்தனை தடைகளையும் மீறித்தான் வென்றார்கள்!! விவசாயிகள் போராட்டம் நாட்டுக்கு சொல்வது என்ன?

 -MMH

விவசாயிகள் கடைப்பிடித்த‌ அறவழியின் பெரு வெற்றிதான் இது. நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்குப் பிறகு, இதுவே நெடுநாள்க‌ள் நடைபெற்ற அமைதியான போராட்டமாகும். 

26 நவம்பர் 2021 அன்றுடன் முதலாண்டு நிறைவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளார். இது, போராடும் விவசாயிகளுக்கும் நமது ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய வெற்றி.

கடந்த ஓராண்டாக விவசாயிகளின் அறப்போராட்டம் கடந்து வந்த பாதையும், அந்தப் போராட்டம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்திகளையும் கொஞ்சம் பார்ப்போம்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் செப்டம்பர் 2020ல் பாராளுமன்றத்தின் பின் வாசல் வழியே கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்திலோ, பொதுத்தளங்களிலோ, விவசாயக் குழுக்களிடமோ கலந்தாலோசிக்கப்படவில்லை.

"இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகள் கேட்டது அல்ல, அது அவர்களுக்கு நன்மை பயப்பதுவல்ல. அவை திணிக்கப்படுபவை. கார்ப்பரேட் கம்பெனிக்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும்" என்ற அச்சம் பெரிதாக ஆட்கொள்ள அக்டோபர் 2020ல் பஞ்சாபில் விவசாயக் குழுக்கள் ஒன்றிணைந்து போராடத் தொடங்கின. பஞ்சாபிலும் ஹரியானாவிலும் பெரும் ஆதரவு கிடைத்தது. பஞ்சாபின் 32 விவசாய சங்கங்களுடன், ஹரியானாவின் சங்கங்களும் இணைந்து சம்யுக்த கிசான் மோர்சா என்னும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைக்கப்பட்டது. நவம்பர் 26 ``டெல்லி செல்வோம்" என்ற அறைகூவலுடன், டெல்லி நோக்கி பயணமானார்கள்.

பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், "டெல்லி சலோ" திட்டத்தின்படி டெல்லிக்கு டிராக்டர் டிராலிகள், ஜீப்புகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில்கூட சென்றனர். ஆனால், பா.ஜ.க அரசாங்கத்தின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நாடு முழுவதுமிருந்தும் விவசாயிகள், ஆர்வலர்கள் வர, பெரும் திரள் டெல்லியினுள் அனுமதிக்கப்படாததால், ஆங்காங்கே டெல்லியின் வெளியே நெடுஞ்சாலைகளிலேயே அமர்ந்து வன்முறையற்ற அமைதியான வழியில் போரட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த நவம்பர் 26ல் ஒரு வருடம் நிறைவடையும்.

தமிழகத்திலிருந்தும் பலரும் பல சமயங்களில் பல நாள்களுக்கு டெல்லி சென்று பங்கேற்றனர். இங்கு தமிழகத்திலும் பல தலைவர்கள் பல ஊர்களில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல அறவழிப் போராட்டங்களை அரங்கேற்றினர்.

டெல்லியின் 5 எல்லைகளில் பல்லாயிரம் முதல் பல லட்சம் வரை விவசாயிகள் கூடினர். பஞ்சாப், ஹரியானா, ம.பி, உ.பி, இமாச்சல் என எல்லாத் திசைகளிலிருந்தும் திக்ரி, பல்வல், காசிபூர், சிங்கு எல்லைகளில் கூடி, தங்கத் தொடங்கினர்.

தங்கும் இடங்கள், குளியலுக்கு அறைகள், எல்லோருக்கும் உணவு, குடிநீர், மருந்து, மருத்துவர்கள் என எல்லாம் அமைக்கப்பட்டு, பண்டைய நதி நாகரிகம் போல் இது புதிய நெடுஞ்சாலை நாகரிகமாக, முழுவதுமாக இயங்கும் சிறு நகரம் போல் அமைக்கப்பெற்றன.

சரி இதுவரை நடந்தது என்ன, விவசாயிகள் சாதித்தது என்ன?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறி வருகின்றனர். இந்தப் போராட்டம் அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் இந்திய விவசாயத்தின் வருங்காலம் பற்றியது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நமது உணவு மற்றும் விவசாய முறைகளை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டம். சாதாரண குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தனது பங்கை கைவிடுவதற்கு எதிராகவும் இது அமைந்தது.

இந்திய அரசுடன் 11 சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை.

விவசாயிகளின் கோரிக்கைகள்:

(அ). நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும் கொண்டு வரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான, கார்ப்பரேட் சார்பு கொண்ட இந்த 3 சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

(ஆ). அனைத்து விவசாயிகளுக்கும் மற்றும் அனைத்து விவசாய விளைபொருள்களுக்கும் ஒரு சட்டபூர்வ உரிமையாக MSP உத்தரவாதத்தை இயற்றுதல்.

(இ). டெல்லியில் காற்றின் தரம் தொடர்பான புதிய சட்டத்தில் கிரிமினல் மற்றும் தண்டனை விதிகளிலிருந்து விவசாயிகளை நீக்குதல்.

(ஈ) மின்சாரச் சட்டத்துக்கான திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் - இது விவசாய மற்றும் பொது நுகர்வோருக்கான குறுக்கு - மானியங்களை அகற்றும்.

கடைசிச்சுற்று பேச்சுவார்த்தை 2021 ஜனவரி 22 அன்று முடிவடைந்தது, அதன் பிறகு, இந்திய அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

11 சுற்று பேச்சு வார்த்தைகளில், இந்திய அரசு விவசாயிகளுக்கு போதிய சலுகைகளை வழங்கவில்லை. ஆனால், அது வழங்கும் அற்ப சலுகைகளின் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டது. "சம்யுக்த கிசான் மோர்ச்சா" இதை முற்றிலுமாக நிராகரித்தது. சட்டத்தின் நோக்கமே விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கும்போது வெறும் திருத்தங்கள் பலிக்காது. 2021 ஜனவரியில் இந்திய அரசாங்கம் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை 1.5 முதல் 2 ஆண்டுகளுக்கு (அல்லது அதற்கு மேல்) நிறுத்தி வைக்க முன்வந்தது. ஆனால், விவசாயிகளால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தச் சட்டம் உயிரோட்டதுடன் இருந்தால், அரசு எப்பொது வேண்டுமானாலும் எதாவது மாற்ற/அனுமதிக்கக்கூடும். அதனால் முழு ரத்துதான் ஒரே வழி என்று திடமாக இருந்தனர்.

இதற்கிடையில், ஜனவரி 2021ல், இந்திய உச்ச நீதிமன்றம் சட்டங்கள் செயல்படுத்துவதைக் காலவரையின்றி நிறுத்தி வைத்தது. இது ஒரு தீர்வுக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையில். மேலும், இந்த‌ 3 சட்டங்களை ஆராய ஒரு குழுவை அமைத்தது. ஆனால், இந்த‌க் குழு இந்திய அரசாங்கத்தின் பரிந்துரைகளின் பேரில் ஒரு சார்புடைய (வேளாண் சட்டங்களை ஆதரிக்கும்) குழுவை உருவாக்கினர்! ஆகவே SKM இந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்றது. ஏனென்றால், போராடும் விவசாயிகள் அரசுடன் பேசி வந்ததால்.

2020 டிசம்பரில் விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை ஏன் ரத்து செய்யவில்லை, ஏன் ஒரு MSP உத்தரவாதச் சட்டத்தை அமல்படுத்தவில்லை என்பதற்கான தர்க்கரீதியான மற்றும் அனுபவபூர்வமான ஆதாரங்களை மோடி அரசு வழங்கவில்லை. வருமானம் குறைந்த‌து, வர்த்தகம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து வெளியேறியது. 

ஒழுங்குமுறை அமைப்புகளின் மேற்பார்வை இல்லாததால் நேர்மையற்ற வணிகர்களால் விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள், அதைப் பார்த்து அரசாங்கமே ஒழுங்குமுறை விதிகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. ஆனாலும், விவசாயிகளுக்கு சந்தையில், அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பி விலையைவிட‌ மிகக் குறைந்த விலைதான் கிடைத்தது.

விவசாயிகள் இயக்கம் சாதித்தது என்ன?

1. மத்தியிலும், ஹரியானா, உத்தரகாண்ட், உ.பி போன்ற பல மாநிலங்களிலும் ஆளும் பி.ஜே.பி பின்தங்கிய நிலையில் உள்ளது. அப்படி இல்லை என்றால், இந்தக் குறைந்த சில சலுகைகளைக் கூட வழங்கியிருக்காது.

2. விவசாயிகள் தங்கள் அடையாளத்தை அன்னதாதாக்கள் என்றும் விவசாயிகள் என்றும் பெருமையுடனும் முன்பு இல்லாத கண்ணியத்துடனும் நிலைநாட்டத் தொடங்கியுள்ளனர். இப்போது இளைஞர்கள்கூட தங்களை விவசாயிகள் என்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். இது ஓர் அற்புதமான சமூக மாற்றம்.

3. விவசாயிகள் ஒற்றுமை அதுவும், `ஒற்றுமையில் வேற்றுமை'யில் வலிமையைக் கண்டுள்ளனர். அவர்கள் மாநில, மத, சாதி, பாலினம் மற்றும் வயது தடைகளைக் கடந்து ஒன்றுபட்டுள்ளனர்.

4. விவசாய சங்கங்கள் இணைந்து செயல்பட‌த் தொடங்கியுள்ளன. அதில் பல நன்மைகளைக் கண்டுள்ளனர். அது எதிர்கால போராட்டங்களுக்கும் பெரிதாக உதவும்.

5. பெண் விவசாயிகள் இந்த இயக்கத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளனர். மேலும் அவர்களின் பங்களிப்பு பல வழிகளிலும் காணப்படுகின்றன. இதுவரை வேறு எந்த விவசாயி இயக்கமும் இதைச் செய்ய முடியவில்லை.

6. விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். ஏனெனில், பிரச்னைகள் மற்றும் தாக்கங்கள் பொதுவானவை. இந்த ஒற்றுமையும் மற்ற எதிர்கால போராட்டங்களுக்கு நல்லது.

7. விவசாயக் கொள்கைகளும் விவசாயிகளின் எதிர்காலமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் பொது விவாதத்தின் மையமாக உள்ளன. இதனால் விவசாயிகளின் குரல்கள் கொள்கை வகுப்பின் மையத்தில் இருப்பதையும் உறுதி செய்யும்.

8. விவசாயிகள் இயக்கத்தின் புதிய‌ பலத்தால் அவர்கள் நடத்திய கரும்பு SAPகள், மின்சாரம் வழங்குதல், விவசாய விளைபொருள்களுக்கான பொது கொள்முதல் நிலையங்களைத் திறப்பது மற்றும் விவசாயிகளுக்கு உடனடியாகப் பணம் வழங்குதல், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு, பாசன நீர் வழங்கல் போன்ற பல உள்ளூர் போராட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.

9. இந்த இயக்கம் பா.ஜ.க-வின் உண்மையான நிறத்தையும் இயல்பையும் உலகுக்கு முன்வைக்க ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. பா.ஜ.க உண்மையில் எவ்வளவு வில்லத்தனமானது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. விவசாயிகள் அமைதி, பொறுமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையுடன் அற வழியில் போராடுகிறார்கள். அதே நேரத்தில் பா.ஜ.க பல முறை பல வழிகளில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசின் ஜனநாயகமற்றத் தன்மை வெட்ட வெளிச்சம் ஆகியுள்ள‌து. அமைதியாகப் போராடும் விவசாயிகள் மீது நேரடியான வன்முறைத் தாக்குதல்கள், இயக்கத்தைத் தடம் புரள வைக்க அரசு இயந்திரத்தை ஈடுபடுத்துதல், போராட்ட இட‌ங்களுக்கான தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசியப்பொருள்களைத் துண்டித்தல், போராட்டக்காரர்கள் மீது ஏராளமான போலி போலீஸ் வழக்குகள், போராட்டம் நடத்தும் விவசாயிகளை பல்வேறு இழிவான பெயர்களில் அழைத்தல் போன்ற கீழ் தந்திரங்கள் முயற்சிக்கப்பட்டன,

10. இந்த இயக்கம் விவசாயிகளின் சிறந்த நிர்வாக‌த் திறன்களை உலகுக்குக் காட்டி இருக்கிறது. பெருமளவில் கல்வியறிவற்றவர்களாகவும், படிக்காதவர்களாகவும், காணப்படும் விவசாயிகள், இந்த இயக்கத்தை சிறப்பாக அமைதியான வழியில் செயல்படுத்த முடியும் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றனர்.

11. விவசாயிகள் போராட்டம் பல புதிய தலைவர்களை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த மாநில தேர்தல்களில் பா.ஜ.க-வை பெரிதும் பாதித்திருக்கிறது.

12. சொல்லப்போனால் இது எதிர்க்கட்சி போல செயல்பட்டு நம் நாட்டின் மக்களாட்சிக்கே பெரியதொரு நன்மையை நிகழ்த்தியுள்ளது. மேலும் மற்ற மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவும் வலிவும் கொடுத்து தானும் பெற்றிருக்கிறது.

365 நாள்கள் தொடர்ந்து போராட்டக் களத்தில் இருப்பதால் விளையும் கஷ்டங்களைப் பற்றி?

இந்த இயக்கம் நீண்ட காலமாகத் தொடர்வதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல‌ பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். 2020-21 குளிர்காலத்தில் கடுமையான குளிர், பின்னர் ​​தாங்க முடியாத கோடை வெப்பம் மற்றும் கொட்டும் மழை/வெள்ளம், தற்போது மீண்டும் கடுங்குளிர் ஆரம்பம் என பெரும் சிரமங்கள் இருந்தும் அவை போராடும் விவசாயிகளைத் தடுக்கவில்லை.

இதனிடையே கோவிட் தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளைத் தைரியமாகவும் அச்சமின்றியும் எதிர்கொண்டனர். மொத்தத்தில் வாழ்வா சாவா பிரச்னைதான்.

இந்த விவசாயிகள் போராட்டக்களங்களில் பலமுறை தீப்பற்றி உள்ளது. கூடாரங்கள், தள்ளுவண்டிகள் மற்றும் குடிசைகள் எரிந்து நாசமாகின. ஆனாலும், அவர்கள் உறுதியாகத் தொடர்கிறார்கள்.

இதுவரை 670-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இதில் 9 இறப்புகள் அரசின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட விரக்தியில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை. டெல்லியில் நடந்த குடியரசு தின விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மரணம், போராட்டக்காரர்களின் தலையில் போலீஸ் தடியடியில் இருந்து ஒரு மரணம்.

மேலும் குறைந்த பட்சம் 5 பேர் பா.ஜ.க-வினரால் நேரடியாகக் கொல்லப்பட்டவர்கள், லக்கிம்பூர் கேரியில் நடந்த படு கொலை போல்.

பஞ்சாப் மாநில அரசு, இயக்கத்தின் தியாகிகளுக்கு ஒரு சிறிய இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ள‌போதும், ​​​​மோடி அவர்களின் மத்திய அரசு இந்திய நாடாளுமன்றத்திலும் பிற இடங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்கள் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று கூறியது.

பா.ஜ.க அரசுகள் எப்படி நடந்து கொண்டன?

நரேந்திர மோடியின் மத்திய அரசும், பா.ஜ.க ஆளும் மற்ற மாநில அரசுகளும் கடந்த 12 மாதங்களாகத் தங்கள் சொந்த நாட்டின் விவசாயிகள் மற்றும் குடிமக்களுக்கு எதிராக ஒரு போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், கமிஷன் ஏஜென்டுகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் நிதியுதவி பெறுபவர்கள் எனத் தொடர்ந்து முத்திரை குத்தி வந்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் கூட்டங்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் விவசாயத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தண்ணீர், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தி வருகின்றனர்.

பல‌ இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க-வினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டம் நடத்தும் விவசாயிகளின் தலையை உடைக்க காவல்துறைக்கு அறிவுறுத்தும் மூத்த அதிகாரிகள் வீடியோவில் சிக்கியுள்ளனர்.

ஹரியானா பா.ஜ.க முதல்வர், விவசாயிகளுக்கு எதிராக லத்திகளை எடுத்து வன்முறையில் ஈடுபடுமாறு தன் கட்சியினருக்கு அறிவுறுத்துவது வீடியோவில் சிக்கியுள்ளது.

பா.ஜ.க அமைச்சர்களின் (பேருக்கான) விவசாயிகள் அமைப்புகள் விவசாயிகள் போராடும் இடங்களில் விவசாயிகளைத் தூண்டிவிட்டு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க முயன்றனர். விவசாயிகளிடமிருந்து வன்முறையைத் தூண்டுவதற்காக, பா.ஜ.க தலைவர்களின் ஊர்வலங்கள் வேண்டுமென்றே மோர்ச்சா தளங்களுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

இதுவரை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 26, 2021 அன்று இந்திய குடியரசு தின நிகழ்வுகளுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர், அவர்களின் வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட விவசாயிகள் நீதிமன்ற வழக்குகளில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சட்ட ஆதரவின் காரணமாக விடுவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்கின்றன.

தேசத்துரோகம், கொலை முயற்சி மற்றும் பல கடுமையான குற்றச்சாட்டுகளுடன் சில போராட்டக்காரர்கள் மீது பொய் வழக்குகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொய் வழக்குகளின் சரியான‌ எண்ணிக்கைகூட தற்போது இவர்களிடம் இல்லை.

லக்கிம்பூர் கேரி விவசாயிகளின் படுகொலை:

அக்டோபர் 3, 2021 அன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது இரக்கமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், ஆஷிஷ் மிஸ்ராவும் அவரின் உதவியாளர்களும் (அவர் பா.ஜ.க தலைவரும் மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ராவின் மகன்) மூன்று வாகனங்களுடன் வேகமாகச் சென்று விவசாயிகளைத் தாக்கினர். இதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேருக்கு மேல் காயமடைந்தனர். 

தேராய் பெல்ட்டின் சிறுபான்மை சீக்கியர்களுக்கு எதிராக மத நல்லிணக்கத்தையும் பகைமையையும் ஊக்குவிக்கும் வகையில் மந்திரி அஜய் மிஸ்ராவின் பொதுப் பேச்சுகள் முன்பு இருந்தன. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள திகுனியா என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமைச்சர் இன்னும் தனது பதவியில் தொடர்கிறார், அஜய் மிஸ்ரா தேனியைப் பதவி நீக்கம் செய்யாமல் மோடி அரசு தனது ஒழுக்கக்கேட்டை தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.

பொதுமக்களின் பெரும் அழுத்தத்தின் காரணமாக, அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தேனி மற்றும் அவரின் கூட்டாளிகளை உ.பி காவல்துறை கைது செய்ய வேண்டியதாயிற்று. இந்திய உச்ச நீதிமன்றம் இந்தச் சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு, வழக்கைத் தொடங்கியுள்ளது, இதன் காரணமாகப் படுகொலை தொடர்பான விசாரணையைக் கண்காணிக்க மற்றொரு, உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பு:

26 நவம்பர் 2021, முதல் ஆண்டு நிறைவு ஆகும் நேரத்தில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளார். இது ஒரு மிகப்பெரிய வெற்றி. போராடும் விவசாயிகளுக்கும், நமது ஜனநாயகத்துக்கும் கூட.

இருந்தும், இது 4-ல் ஒன்றுதான். இன்னும் 3 கோரிக்கைகள் இருகின்றன!

இப்போது விவசாயிகள் குழுக்கள், முதலில் பாராளுமன்றத்தில் சட்டம் வாபஸ் நடைபெறட்டும் என்றும், மீதமுள்ள 3 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். முக்கியமாக, சட்டபூர்வ உரிமையாக MSP உத்தரவாதத்தை இயற்றுதல்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, இந்த அரசு தேர்தல் வந்தால் மட்டுமே செயல்படும் அரசு. மற்ற நேரங்களில் கார்ப்பரேட்டுகளின் நன்மைக்கு மட்டுமே உழைக்கும் அரசு. அப்படிதான் இந்த 3 சட்டங்களும் சம்பந்தப்பட்டோரிடம் கலந்தாலோசிக்காமல், கார்ப்பரேட்டுகளின் நன்மைக்காக‌ இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்தது. மிகப்பெரும்பான்மையான விவசாயிகள் இது வாழ்வா-சாவா பிரச்னை என்பதைக் கண்டறிந்து தீவிரமாக எதிர்த்தனர்.

வன்முறையற்ற அமைதியான வழியில் இந்த இயக்கம் போராட்டத்தை நடத்திச்சென்றது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. அவர்கள் அப்படி கடைப்பிடித்த‌ அற வழியின் பெரு வெற்றிதான் இது. நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்குப் பிறகு, இதுவே நெடுநாள்க‌ள் நடைபெற்ற அமைதியான போராட்டமாகும். அதனால்தான் உலகெங்கிலுமிருந்தும் இதற்கு பெரும் ஆதரவு பெருகியது.

இந்த அரசு மற்ற கோரிக்கைகளையும் சரியாக நிவர்த்தி செய்து நமக்கெல்லாம் உணவளிக்கும் அன்னதாத்தாக்களான விவசாயிகளை கௌரவத்துடன் அனுப்பிவைக்க வேண்டும்.

நன்றி: விகடன்.

- ராயல் ஹமீது.

Comments