திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது !!

-MMH

    திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் திருநாளான நேற்று மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினார்.

6-ம் திருநாளான இன்று (நவ.9) அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோயில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை முகப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நாழிக்கிணற்றில் இருந்து கடற்கரை வரையும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

7-ம் திருநாளான நாளை (நவ.10) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்கவும் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

-சுரேந்தர்.

Comments