சூழல் சுற்றுலா தொடக்கம்! பறவைகள் மற்றும் விலங்குகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுக்கான வனத்துறையினர் நடவடிக்கை!

 

-MMH

      ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும், இருவாச்சி பறவை போன்ற அரிய வகை பறவை இனங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இந்த நிலையில் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் சூழல் சுற்றுலா திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. 

இதையொட்டி நேற்று முதல் நாள் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று இருவாச்சி பறவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் அருகில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றனர். அங்கு வனச்சரகர் புகழேந்தி வண்ணத்துப்பூச்சிகளின் வகைகள் மற்றும் அவற்றின் முக்கியத்தும் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விளக்கி கூறினார். அப்போது வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து அட்டகட்டி காட்சி முனை, அப்பர் ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றனர். அப்போது அரிய வகை பறவைகளை பார்த்து ரசித்தனர்.    

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

 தமிழகத்தில் 312 வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி வனப்பகுதியில் மட்டும் 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்க்கை மூலம் மற்ற வனவிலங்குகளுக்கு உணவு சங்கிலியாக விளங்குகிறது. இந்த பூங்காவில் சூழல் சுற்றுலா திட்டத்தின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-S.ராஜேந்திரன்.

Comments