கருங்காலக்குடியில் கண்மாயைக் காணவில்லை!

   -MMH 

   மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் உள்ளது, மயமதுகனி ஏந்தல் எனும் கண்மாய். இந்தக் கண்மாய், கருங்காலக்குடி - அய்யாபட்டி ஊராட்சிகளின் எல்லையில் அமைந்திருந்தது. இக்கண்மாயின் வேளாண்மை பாசனப்பரப்பு கருங்காலக்குடி ஊராட்சியில் உள்ளது.

தற்போது இப்பகுதியிலிருந்த வேளாண்மை நிலங்கள் முழுதும் குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டதால், கண்மாயின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. 

கண்மாயை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதக் கும்பல்கள் மயமதுகனி ஏந்தல், அதன் மறுகால் மற்றும் ஓடைப்பகுதியை முற்றாக ஆக்கிரமிப்பு செய்தனர். கருங்காலக்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மறுகால் வழியே மழைநீர் வெளியேற முடியாததால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும், இசுலாமியர்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலிலும் மழைநீர்புகுந்து மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து மழை காலமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட அரசுத்துறை விரைந்து செயல்பட்டு கண்மாயையும், மறுகாலையும் கண்டறிந்து வெள்ளநீரை முறையான வடிகாலில் அனுப்பவில்லை என்றால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பெரும் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் சூழல் உள்ளது.

மயமதுகனி ஏந்தல் கண்மாய் விசயத்தில் இனிமேலாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை வழக்கம் போல் குதிரை ஓடிய பிறகுதான் லாயத்தைப் பூட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பிலும், பெரும் அச்சத்திலும் உள்ளார்கள், கருங்காலக்குடி பொதுமக்கள்.

- மதுரை வெண்புலி.

Comments