கொட்டாம்பட்டி அருகே நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி 166 பவுன் நகை கொள்ளை!

 

-MMH

           மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிவிட்டு 166 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேர், நிறுவனத்திற்கு சொந்தமான 166 சவரன் நகைகள் மற்றும் சுமார் ஒரு லட்சம் ரூபாயுடன் ஒரு காரில் விழுப்புரத்திலிருந்து நேற்றிரவு மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மேலாளர் மைக்கேல் ராஜ், ஊழியர் செந்தில், ஓட்டுநர் சரவணன் ஆகியோர் அந்தக் காரில் பயணித்தனர்.

அவர்களது வாகனம், கொட்டாம்பட்டி - மேலூர் நான்கு வழிச்சாலையில் அய்யாபட்டி விலக்கு அருகே நள்ளிரவில் வந்துகொண்டிருந்தபோது அவர்களது காரைப் பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார், அவர்களை முந்திச் சென்று மறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஐந்து மர்ம நபர்கள், நிறுவன ஊழியர்கள் 3 பேரையும் அரிவாளால் தாக்கிவிட்டு நகை, பணத்தோடு காரையும் திருடிவிட்டு, தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

திருடிச் செல்லப்பட்ட நிதி நிறுவனத்தின் கார் கருங்காலக்குடி - சிங்கம்புணரி சாலையில் சுக்காம்பட்டி கண்மாய் அருகே மர்ம நபர்களால் விட்டுச் செல்லப்பட்டது. அந்தக் காரை கொட்டாம்பட்டி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நிதிநிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மதுரை வெண்புலி, பாரூக்.

Comments