பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 18,694 பேருக்கு கொரோனா தடுப்பூசி!! சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!!

 -MMH 

பொள்ளாச்சி வட்டாரத்தில் சுகாதாரத்துறையினர் எடுத்த தீவிர நடவடிக்கையால் தற்போது கொரோனா பரவல் குறைந்து, கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்கிடையில் முகாம் குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் மூலம் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 10 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை ஆணையாளர் தாணுமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அப்போது முகாமில் செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது நகர்நல அலுலர் டாக்டர் ராம்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

இதேபோன்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 50 இடங்களிலும், தெற்கில் 52 இடங்களிலும், ஆனைமலையில் 48 இடங்களிலும், கிணத்துக்கடவில் 30 இடங்களிலும், வால்பாறை நகராட்சியில் 50 இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சியில் 1,900 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 4,174 பேருக்கும், தெற்கில் 4276 பேருக்கும், ஆனைமலையில் 4,890 பேருக்கும், வால்பாறையில் 822 பேருக்கும், கிணத்துக்கடவில் 2,632 பேருக்கும் சேர்த்து மொத்தம் 18,694 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

அதே நேரத்தில் 2-வது தவணை தடுப்பூசி ஏராளமானோர் செலுத்தி கொண்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்தும், முகாம் நடைபெறும் நாட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்கள் குறித்த விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. வயதானவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேஷ்குமார், S.ராஜேந்திரன்.

Comments